திரைப் பறவை 2
சினிமா....... வெறும் பொழுது போக்கல்ல.... அதன் வழியே நம்முடைய வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது.. நம்மை நாமே கொண்டாடும் மாயக் கண்ணாடி அது.... நம்மைத் தாலாட்டும் மடி அது... மடி என்றதுமே எனக்கு என் பாட்டியின் மடி வாசனை தான் மனம் நிறைக்கிறது.....பாட்டியை நினைக்காதவர்கள் இருக்க முடியாது... அப்படி நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருக்கக் கூடாது.....கெண்டக்கி சிக்கன் கேட்டு அழும் பேரனின் கண்ணீரைத் துடைக்க மழையோடு துளித் துளியாய் சேர்த்த பொருள் கொண்டு, சந்தையில் விற்று கோழி பிடித்து, கூனொடு நடந்து வரும் பாட்டி நமக்கானவள்.... அவள் நம் பாட்டியாகவே மாறுகிறாள் என்பதை லீ ஜியாங் கியாங்கியின் " தி வே ஹோம்"(2002) என்றக் கொரியப் படத்தில் உணர்ந்தேன்.... நினைத்தாலே கசிந்துருகும் பாட்டியின் மழலை வாசம்...... எனை நிரப்பிக் கொண்டே இருக்கிறது....
பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் நூலிழையாய் ஒரு பெரு மழை பெய்து கொண்டே இருக்கும்.... ஆரம்பத்தில் ஊமைக் கிழவி என்று திட்டும் பேரன்.. பின் மெல்ல மெல்ல பாசத்தில் இணைவதும்... பேரனுக்காக பாட்டி... பார்த்து பார்த்து செய்வதும்.... அவர்களுக்குள் ஒரு அன்பின் தேசம் வண்ணங்களில் மெல்ல மெல்ல வரையப் படும் திரைக்கதையில் நான்....... வசனமற்ற ஊமையானேன்...
சந்தைக்கு போன இடத்தில் பாட்டி தன் தோழியிடும் உரையாடும் இடத்தில்..... நான் கண்ணீராய்... உருமாறிப் போனேன்....
"அடுத்த முறை வரும் போது நான் இருப்பேனோ.. தெரியாது... இல்லையென்றால் அடுத்த முறை நீ வராமல் கூட போகலாம்"- என்று காசு வாங்காமல் தன் தோழி தரும் பண்டத்தை தயக்கத்தோடு ஆனால் சொல்லாத புன்னகையோடு வாங்கி வரும் போது பாட்டி நம்மை சிதற அடித்து விடுகிறாள்.....
இருக்கும் காசுக்கெல்லாம் பேரனுக்கு பண்டம், விளையாட்டுப் பொருள் எல்லாம் வாங்கி விட்டு மிச்சம் இருந்த காசில் பேரனை பஸ் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த டவுனில் இருந்து தன் ஊருக்கு நடந்தே வருகிறாள் பாட்டி ...
பஸ்சில் வந்து விட்டதால் பேரன் முன்னமே ஊர் வந்து பாட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறான்.. இந்த இரு காட்சிகளும் இரு வேறு கவிதைகளை இரு வேறு காலங்களை நமக்குள் ஒரு குழந்தையின் கிறுக்கலாய் விதைத்து விடுகிறது......
பல பதில்களை கேள்விகளாக்கி விடுகிறது..... எத்தனையோ கேள்விகளை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்க செய்யும் ஒரு கேள்வியின் தொடர்ச்சியில் நின்ற மணித்துளியில் நினைவுகள் சுழலத் தொடங்கின..... சுழல சுழல, நினைவுத் துளிகளின் மொத்தம் ஒரு கடலென மாறி விடுவது தான் மனித சிந்தையின் அதிசயம்.....
பான் நளினின் "சம்சாரா"(2001) என்ற திபத்தியப் படம்..... ஒரு துளியாக எனக்குள் விழுந்து ஒரு பெருங் கடலை தூர் வாரிக் கொண்ட புத்தன் பற்றிய படம்..........புத்தனைப் பற்றிய எனது பாடம்....
போதி கண்ட புத்தனைக் கொண்டாடுகிறோம்... புத்தனை மன்னித்த யசோதரையை நினைவிலாவது வைத்திருக்கிறோமா.....?
"சம்சாரா" வின் நினைவுகளை அசை போடும் தருணங்களில் என் மனமெங்கும் போதிகளாய் வளர்ந்து நிற்கிறது நிஜங்களின் நிழல்கள்...
பல கட்ட தவத்திற்கு பின்... புத்த மடாலயத்துக்கு கொண்டு செல்லப் படும் கதையின் நாயகன்.. மெல்ல மெல்ல உலக ஆசைகளின் மீது ஈடு பாடு ஏற்பட்டு.... காமத்தீயில் தவியாய் தவிப்பதும் இரவினில் அவனையும் அறியாமல் உருகி கரைவதும்.... அதை உணர்ந்த நொடியில் குற்ற உணர்ச்சியில் யோசிப்பதும்.. தனித்து முடிவெடுக்க முடியாமல் தவிப்பதும்... தவத்துக்கும் வரத்துக்கும் இடையே நடக்கும் மிகப் பெரிய போராட்டம்.......
போராட்டத்தின் தொடர்ச்சியாய்.. அவன்.. ஏற்கனவே தன் குருவுடனும் சக பிட்சுகளுடனும் சென்று வந்த மலை கிராமத்துக்குள் செல்கிறான்.. கதையின் நாயகி... தங்கத்தால் செய்த உயிராய் மின்னிக் கொண்டிருக்கிறாள்.... காதலும் காமமும் அவனை தீரா மோகத்துக்குள் தள்ளுகிறது... உடன் பட்ட அவளும் அவனுடன் காட்டுக்குள் வெட்ட வெளியில் இணைகிறாள்... முத்தங்களால் தொடங்கி வைக்கப் படும் காமத்தை முத்தங்களாலே முடித்தும் வைக்கிறது காதல்..... உடல் பட்ட இடமெல்லாம் காதல் விதைக்க கல்யாணமும் ஆகிறது... ஒரு ஆண் மகனும் பிறக்கிறான்... அவனால் இன்னும் இன்னும் நிலை கொள்ள முடியவில்லை... கேள்வி கேட்கிறான்.. சண்டை போடுகிறான் .. அடி வாங்குகிறான்....
தன் மனைவி இல்லாத சூழலில் தன் மனைவியின் தோழியுடனே காமத்தில் திளைக்கிறான்... புது புது முறையில் கலவியில் ஈடுபடுகிறான்.. மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான்... இது நமக்கான இடம் இல்லை என்று உணரும் நாளில் சொல்லிக் கொள்ளாமல் மீண்டும் பழைய இடம் நோக்கிப் புறப்படுகிறான்.... அதைக் கண்டு கொண்ட காதல் மனைவி... ஓடோடி வருகிறாள்..... அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல்...
தலை குனிந்து நிற்கிறான்......
அவள் பேச ஆரம்பிக்கிறாள்...
"புத்தனை மட்டுமே பேசும் உங்களுக்கு யசோதரையின் வலியும் வாழ்வும் எப்படி புரியும்....?........ சரி போ...." என்று சொல்லி விட்டு அழுதபடியே திரும்பி பார்க்காமல் தன் கிராமம் நோக்கி நடக்கத் தொடங்குகிறாள்.. அது வரை தேக்கி வைத்த அத்தனை அழுகையையும் அந்த மணல் வெளியில் ஒரு வெயிலாய் கொட்டித் தீர்த்து கத்தி கதறி கீழே சரிகிறான்....
ஒரு துளி கடலாவது எப்படி என்று ஒரு கேள்வி திரையில் வார்த்தையாகி வந்து பின் பதிலும் சொல்லி போகிறது..
பதில் இது தான்....
"அந்த துளியை கடலுக்குள் வீசி விடுங்கள்....."
திரை விரியும்...
கவிஜி