கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
எனக்கு உகந்தவனை என் ஆசை நாயகனை
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இன்று நான் கண்டு கொண்டேன்.
இதுவரை என் நெஞ்சைத்
தொட்டவர்கள் பலபேர்கள்;
இளவட்ட நாயகர் பலர்
என்நெஞ்சில் குடியிருந்தார்.
சித்தானை உருவத்தில்
எத்தனையோ உள்ளங்களை
மொத்தமாய்க் கவர்ந்தவள் நான்
மோகத்தில் மிதந்தவள் நான்.
என் உருவத்திற்கேற்றவனை
எழில் பொங்கும் மாதவனை
கார்குழல் நிறத்தானை
கன்னல் சுவைக் குரலோனை
எங்கள் தங்கமென்று
காண்பவர் போற்ற எண்ணும்
கொங்கு நாட்டுச் சிங்கத்தை
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
உதட்டுச் சாயமின்றி
யாரையும் நான் காண்பதில்லை
உள்நோக்கம் புரிந்திடவே
புன்னகையும் சிந்திடுவேன்
என்னுள்ளம் கவர்ந்தவனும்
கறுப்புக் கண்ணாடியின்றி
தரிசனம் கொடுப்பதில்லை
கோமதி நாயகத்தின்*
உடன்பிறப்போ இவனும்
அரைக்கால் ஆடையுடன்
அவன் வரும் அழகே தனி!
மின்னல் பார்வையில் என்
உள்ளம் துளைப்பானே
அச்சுகத்தை என்னென்பேன்?
என்னோடு தனிமையில் அவன்
கன்னல் மொழி பேசும
கனவாகப் போய்விடுமோ?
கற்றவன் கலைரசனை படைத்தவன்
கன்னியர்க்கு இனியனாய்க்
காட்சி தருபவன்.
என் குச்சி# இவன் முன்னே
பல்துலக்கி விட்டெறிந்த
வேப்பங்குச்சி போன்றவன்.
மடுவில் கிடப்பவள் நான்
மலை உச்சியில் தொங்கும்
கொம்புத்தேன் மீது ஆசை நான்
கொள்வதும் தவறா?
கற்பனை வெள்ளத்தினை
அணைபோட்டுத் தடுக்க
சிவனே நினைத்தாலும்
அவனாலும் முடியாது.
எதிரும் புதிருமாய்
இருப்பிடங்கள் அமைந்தது
எத்தனை வசதி!
இறைவனுக்குத் தான் எனது
நன்றியைச் சொல்லிடுவேன்.
காலைச் சூரியனே என்னவனாம்
மன்னவன் தான்
இருட்டில் நிலவாகவும் அவனே
எண்ணிலடங்கா தரிசனங்கள்
ஒவ்வோரு நாளும்.
அதுபோதும் வாழ்க்கை
அமுமாய் இனிக்க.
அவன் பார்வையில் சிக்கும் போதோ
சொர்க்கத்தின் மையத்தில்
சிலிர் நடனம் ஆடிடுவேன்.
அடுத்த பிறவியில் எனையாளும்
சுந்தரப் புருஷனாய்
என்னுடன் வலம் வருவான்.
இதைத் தடுக்க எவர் முயன்றாலும்
சக்தியாய் மாறிநான்
சகத்தையே அழித்திடுவேன்.
*ராதிகா சரத்குமார் தயாரித்த அண்ணாமலை என்ற தொடரில் வரும் ஒரு கதாபாத்திரம் கோமதி நாயகம். அவர் எப்போதும் கறுப்புக் கண்ணாடியோடு தான் காட்சி தருவார். அந்தத் தொடர் வெளிவந்த போது எழுதிய கவிதை இது.
#குச்சி என்பது குச்சிக்காலன் என்ற கதையில் வரும் நாயகன்.