அன்பே நீ வந்தபோது -10 ஏன் என்னை சாகடிக்கிறாய்
என் கவிதைக்கு
நடை கற்று கொடுக்க
கைபிடித்து
அழைத்துச் செல்லும்
நடை வண்டியா
உன் கண்கள்!
உன் கண்கள்
கணையாக வரும்
சில நேரம்
காதல்சுனையாக வரும்!
பொன்னுலகைப் பந்தாடும்
உன் பூவிழிகள்
என்னையும்
எட்டி உதைக்கிறது!
நீ
ஓரக்கண்ணால் பார்ப்பதும்
ஒதுங்கி ஒதுங்கி நடப்பதும்
உடைக்கிறது என் நெஞ்சை!
ஒரு பூதக்கண்ணாடி போல்
உன் கண்களும்
தீ பற்றவைக்கும்
அதற்கு ஒன்றும்
பெரிய சூரியன்
தேவை இல்லை!
நிலவின் கிரீடம்
பூமியில் விழுந்ததோ
நீயென!
பூவின் புன்னகை
பூமியில் நடந்ததோ
நீயென!
கறுப்பு வண்டுகள்
குடைபிடிக்கும்
கார்கால இரவில்
கார்த்திகை தீபமாய்
உன் கண்கள்!
உன் கண்களின்
தூபம் பெற்றவன்
கனவு காணும்
சாபம் பெற்றவன்!
உன் கண்களால்
ஒரு மந்திரம் சொல்
இரவு பகலாகும்
பகல் கனவாகும்!
நீ பார்த்தால் போதும்
அதுவே
உன்னைப் பார்த்தவனுக்கு
தண்டனை!
உன் பார்வை
படமெடுத்தால்
நான் ஒரு
பெட்டிபாம்புதான்!
உன்
பார்வையைப் பார்த்து
பழக்கப்பட்ட எனக்கு
பாதாள படுகுழிகூட
ஒரு படிக்கட்டுதான்!
அன்பே,
உன்னைப் பார்ப்பது
ஆபத்து
பார்த்துவிட்டுப் பிழைப்பது
பேராபத்து!
கண்ணால் என்னைப் பார்க்காதே
காயத்தோடு
தீயை வைத்துக் கட்டாதே!
நீ
கண்ணடிக்கும் போதெல்லாம்
இந்தக் காளை
செத்துப் பிழைக்கிறான்!
நீ ஏன்
என்னை சாகடிக்கிறாய்
ஒரு நீண்ட கனவு
என்மேல் படர்வதற்கா!
ஒரு தூண்டிலில்
மண்புழுவாய்த் துடிக்கவும்
நான் தயார்
ஆனால் என்னைஒரு
மீன் வந்து கொத்தாலாமா!