நிம்மதிப் பெருமூச்சு
சித்தர்களின்
சித்து விளையாட்டு
நித்தம் அன்று
நிகழ்ந்ததாம் -அது போல்
வலைதளங்களும்
அலை பேசிகளும்
உலா வருங்கின்ற
காலமிது கண்டுவிட்டோம் !
மாநிலத்தின் நிகழ்வுகளை
மாயக்கண்ணாடி போலின்று
இந்த நொடி நடப்பதெல்லாம்
அடுத்த நொடி உலகறியும்
வித்தைகளும் கற்றுவிட்டோம் !
பூமிதனை வலம் சுற்றும்
நிலவுடனே போட்டியிட
துணைக்கோள்கள் பலவற்றை
விண்வெளியில் ஏவி விட்டோம் !
ஆனால்-
விலையில்லா தகவல்களை
வலைத்தளங்கள் தந்தாலும்
புதுக்கவலை பலவற்றையும்
கூடவே பெற்று விட்டோம் !
துணைக்கோள்கள்- பூமியின்
தட்பவெப்ப மாற்றங்களை
தவறில்லாமல் தருவதுண்டு !
திசை மாறும் மானுடத்தின்
சூட்சுமத்தைதானறிய
நல்லொதொரு துணைக்கோளை
நாம் ஏவ மறந்துவிட்டோம் !
மனித நேயத்தை- இந்த
மண்ணிலே தொலைத்துவிட்டு
வேற்று கிரகம் நாடுகின்ற
வேகமான விஞ்ஞானம் !
மனிதப்பதர்களெல்லாம்- இம்
மண்ணின்மடியை விட்டு
குடியிருக்க இடம் தேடி
வேற்று கிரகம் சென்றுவிட்டால்
நிம்மதிப் பெருமூச்சை
நீண்டதாய் விட்டிடுமோ
மிஞ்சியுள்ள உயிரினமும்
மீதமுள்ள தாவரமும் !