பிரம்மா நீ தவறு செய்யலாமா

படைக்கும் தொழிலை கொண்ட
பிரம்மனே…!
நாங்கள் தவறு செய்யலாம்…!
நாங்கள் மனிதர்கள்…!
மானுடத்தை படைத்த
நீ தவறு செய்யலாமா?

அவளை படைத்திருக்க வேண்டும்…!
இல்லை…!
அவனை படைத்திருக்க வேண்டும்…!
ஏன்?
இந்த இரண்டுங்கெட்டான் படைப்பு…!

யானைக்கு அடி சறுக்கலாம்…!
அண்ட சராசரத்தை படைத்த
உனக்கேன் இந்த சறுக்கல்?

நீ செய்த தவறுக்கு
அந்த சமுதாயத்திற்கு
தண்டனையா?
நீ செய்த பிழையால்
பிழைப்பில்லை அவனுக்கு…!
இல்லை அவளுக்கு…!
நீ தடுமாறியதால்
தடம்புரண்டது
அவர்களின் வாழ்க்கை…!

மனித சமுதாயம்
திருநங்கை என பட்டம் அளித்து…!
காந்தி பதித்த பத்து ருபாய்
பிச்சை போட்டு…!
அரை சதவீத உடலையே
ஆவென்று பார்க்கிறானே….!
மனிதத்தை தொலைத்த
மானங்கெட்ட மனிதன்…!

உன் கேடு கெட்ட
படைப்பையும் மீறி…!
சில திரு நங்கைகள்
கோபுரமாய் கோலோச்சி நின்றதை
கை தட்ட ஆளில்லை….!
அவர்களுக்கு அவர்களே
கைதட்டி கொள்கிறார்கள்…!
அரங்கத்தில் அல்ல…!
அங்காடிகள் நிறைந்த
கடை தெருவில்…!

முழு பிறவி பெற்றெடுக்க
நிர்ணயம் செய்தாய் பத்தென்று…!
நீ குறையாக படைத்ததால்
எண் ஒன்றை குறைத்து
விசிலடித்து கேலி
செய்யும் நீச்சமுள்ள மனிதர்கள்…!

பிச்சை கேட்டு சிலர்…!
காம இச்சை கேட்டு சிலர்…!
மிச்சமுள்ள சொச்ச வாழ்க்கைக்கு
கச்சை கட்ட யார் உளர்?

சமுதாயம் பகட்டாய் கூப்பிட
திரு நங்கை என பட்டம்…!
பசி அடங்க பிச்சை
பத்து ருபாய் நோட்டு…!
காம விழி கொண்டு
போக பொருளாய்
வழி நெடுகிலும் கேலி…!
கூடி கூத்தாட
கூவாக திருவிழா…!
என்றாகி போனதே
அவர்கள் வாழ்க்கை…!

அழகான பெண்கள்
அரிதாரம் பூசி
அவதாரம் எடுத்து
திரு நங்கை போல் காட்சி….!
திரு நங்கைகளோ
அழகி போட்டி நடத்தி
அழகாய் தோன்றி
அழகு பெண்களாய் காட்சி…!

ஒரு நாள்
கூத்தாண்டவர் கோவில்
முன் குத்தாட்டம்…!
மீதமுள்ள நாளெல்லாம்
பிழைப்புக்கு திண்டாட்டம்…!

அழகி போட்டி நடத்தி
ஒரு நாள் அழகியாக…!
மீதமுள்ள நாளெல்லாம்
அவதாரமாக…!

பூசாரி தாலி கட்ட
ஒரு நாள் திருமதி அரவாணனாக…!
மீதமுள்ள நாளெல்லாம்
அரவாணியாக…!

பிரம்மா படைத்துவிட்டாய்
அவர்களை குறையாக…!
இனி உன்னால் படைப்பை
திருத்த வழியில்லை…!
உன் நண்பன் காக்கும்
சிவனிடத்தில் பரிந்துரை செய்து
பரிகாரம் தேடு…!
மனிதர்கள் அவர்களுக்கு
பாதை காட்டட்டும்…!
மலர்களை தூவி அல்ல…!
முட்களை தூவாமல்…!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (20-Dec-14, 8:50 am)
பார்வை : 157

மேலே