மதம் பிடித்தவன்

இருள்களின்
தனிமங்களைத் தொலைத்து
வீசிச் சென்ற
துர்நாற்ற துயர வீச்சரிவாள்கள்
தரும் வலியைத் தாங்கித்தாங்கி
மரத்துப் போனது இவன் மேனி

எல்லோருக்காவும் அழுத வானம்
இவனுக்கும் அழுதது
வரப்புதாண்டி
வந்திருந்த பயிர்களின் திமிர்
இமைதுடிக்கும் நேர பலாத்காரத்தில்
காணாமல் போனது
இருந்தும் இவன் திருந்தவில்லை

பரிசுத்த கனவான்களின்
கருணைப் பார்வையில்
காத்துக் கிடந்து
மோட்சங்களும் மீண்டும் கல்லாய் மாறின
மிதித்த ராமன் சரியில்லாததால்

இவனிலும் ஊனன்
பரலோகத்தில் பலவானாக
பராமரிக்கப் படுகையில்
இவன் நடந்த பாதையிலே நடந்தான்
அநேக பாதைகள் இருந்தும்

இவனால் வெட்டுண்ட ஆட்டின் தலைகள்
தெற்கு நோக்கி காத்திருந்தன
வடக்கு நோக்கி கிடக்கும்
முண்டத்துடன் சேர்வதற்காய்

நடுநிசியிலும்
நடுப்பகலிலும்
நானவனைப் பார்த்தேன் .
எப்போதும் அயராதிருந்தான்

அந்த மூன்றாமவன்
காணும் நேரமெல்லாம்
தூங்கிக் கொண்டிருந்தான் .
அப்போதும்
அவன் ராச்சியம்
மேலும் அகலமாகி விரிந்தது

ஆலையின் சங்கொலி
அடித்து முடிக்கையில்
அவனுக்கென்று ஒதுக்கப் பட்ட புதைகுழியில்
வேறு சிலர் வேறொருவனை எரித்தார்கள்

போரிட்டு பார்த்ததில்
புதைக்க வந்தவர்களும்
பிணமானார்கள்
புதைக்கத்தான் இடமில்லை.

அவனுக்குள் இருக்கும்
அவனை வெளியேற்ற வேண்டும்
அவனின் மத ஆடை களைந்து
நிர்வாணப் படுத்த வேண்டும்

அவன்
அந்த ஆடை கட்டிய நாளிலிருந்து
தொலைந்து போகவுமில்லை
அவன் அவனாகவுமில்லை

இது இறந்த காலமாக
இருந்திருந்தால்
இப்போது விட்ட ராக்கெட்டை
எப்போதோ விட்டிருப்பான்

அவனின்
கல்யாண காகிதத்தில்
இருவீட்டார் அழைப்புக்குப்பதில்
இரு உலகத்தார் அழைப்பு
என்றிருக்கும் .

எழுதியவர் : சுசீந்திரன். (21-Dec-14, 11:32 am)
Tanglish : matham pidithavan
பார்வை : 100

மேலே