என் பெயர் நித்யா - மகிழினி

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோல் உரசி பாசம் காட்டும்
ஒருவனை மனமார மனதிற்குள்
திட்டிக் கொண்டுதான்
பொழுதுகள் நகர்கின்றன !

பேருந்து நெருசலில்
கழுத்தருகே கழுத்தறுக்கும்
பெருமூச்சுகளுக்கும்
காதருகே கேட்கும் கொச்சை
வார்த்தைகளுக்கும்
அர்த்தங்கள் தேடி நடந்தால்
நான் வேசியாகிவிடுவேன் !

விட்டுக்கொடுத்து போவதில்
தவறொன்றும் இல்லை
என்று இலைமறையாய்
தேவையை சொல்லும் எந்த
ஒரு ஆடவனும்
நாயாகவே தெரிகின்றான்!

பாவாடை அணிந்தால் கால்கள்
தெரிகிறது ! சேலை உடுத்தினால்
முழுதும் தெரிகிறது ! முழுதாய்
முக்காடிட்டால் "பெரிய பேரழகி இவ "
என்ற ஏளனமும் காற்றில் பறக்கிறது !

மெல்லிடையே கொடிமலரே
செவ்விதழே கவிஞன் எல்லாம்
ஒழிக ! முள்ளே தீயே நெருப்பே
என்று வஞ்சித்து புகழ்பவனும்
சேர்ந்தே ஒழிக !

பணத்திற்காக பாய் விரிக்கும்
ஓராயிரம் மாதவிகள்
விற்பனைக்கு இருக்கும் போது
ஆறாம் வகுப்பு பயிலும்
கண்ணகி கற்பழித்து கொலை
என்ற செய்தி கேட்டால்
கண்ணீர் தான் வருகிறது !

ஒருவேளை அவள் பெயரும்
நித்யாதானோ என்னவோ ?

வீட்டில் வளர்ந்து தெருவில்
உணவாகும் தேவதைகளின்
சாபங்கள் ஒருவேளை இப்படிதான்
இருக்குமோ !

எழுதியவர் : நித்யா (21-Dec-14, 12:51 pm)
பார்வை : 5271

மேலே