மார்கழியே வருக
மார்கழியே வருக!
வாலைக் குமரிகள் காலைப் பனியதில்
கோலம் வரைவதில் காலைப் பதிவதில்
மாதவன் சிரிப்பதில் மார்கழி மலர்வதில்
ஆதவன் எழுவதில் ஆர்த்தெழும் கடலதில்.
ஆளை எழுப்பிட காலை முழங்கிடும்
தாள இசையொலி வானம் நிறைந்திடும்.
ஆண்டாள் தொழுதிடும் ஆனந்தப் பஜனனைகள்
ஆன தெருக்களும் ஆலயத் திருவிழாக்கள்.
வாடைக் குளிரிலும் ஊரு விழித்திடும்
ஆடை நனைத்தும் நீரு குளித்திடும்.
ஆடும் மணிகளும் ஆலயம் முழக்கிடும்.
தேடும் இறைகணம் கேட்டு எழுந்திடும்.
வேளை விடியலில் வீதி விரைந்திடும்.
வேத வசனங்கள் நீதி உரைத்திடும்
வாசத் திரவியம் சாந்தும் மணந்திடும்
பூசை மலர்களும் பூத்துச் சிரித்திடும் .
ஆக்கும் அழகது பூக்கும் முகமலர்
ஏற்கும் கடவுளை சேற்கும் அகம்வளர்
நேர்த்தி யதனில் தேக்கி நிறையுமே!
மூர்த்தி நிசமே தோன்றத் தெரியுமே!
பாடும் குரல்களே பாடிக் கலந்திடும்.
தேடும் பகவனை சூடிப் பணிந்திடும்.
மூடிய இரவும் ஓடி ஒளிந்திடும்.
தேடிய விடியலும் கூடி ஒளிர்ந்திடும்.
பேசும் மனிதம் வீசும் சுகந்தமே!
வாசம் இறைவனில் நேசம் பகர்வதே!
நாடும் வழிகளே ஆகும் பல பல
கூடும் இடமோ தேறும் ஒருவனில்
கொ.பெ.பி.அய்யா,
.