ஈடில்லா அன்னையவள்
அகிலத்தில் அவதாரம்
அன்புக்கு அடையாளம்
ஓருடல் உலகத்தில்
ஈருயிர் இவளன்றோ..?
சுமையவள் தேகத்தில்
சுழியிடும் பிள்ளைக்கு
இதயத்தின் துடிப்புகள்
இவளது உயிரன்றோ..?
வலியினை சுமந்து
வளர்த்தாய் கருவினை
உணர்வுகள் விதைத்த
உழவனும் நீயென்று...
ஈரைந்து மாதங்கள்
ஈடில்லா ஆசைகள்
மனதோடு தான்வைத்து
மழலையை ஈன்றாயே ?
உலகமே உருவத்தில்
உறவாக வந்ததுபோல்
தாலாட்டி சோறூட்டும்
திங்களது நீயன்றோ..?
பாசத்தில் பசியாறி
பட்டினியை நீதாங்கி
பாலூட்டி வளர்த்தாயே
பாரங்கள் பாராமல்..
எனைசுற்று மொருபூமி
ஏற்றிவிட்ட தொருசாமி
அன்னையவள் ரூபத்தில்
அணைகாத்து நின்றாளே..
ஏழேழு ஜென்மங்கள்
எனைமீறி வந்தாலும்
கைகூப்பி நானழைக்கும்
கடவுளவன் நீயன்றோ..