உயிர்த் துளிகளின் ஓட்டம் - இராஜ்குமார்

உயிர்த் துளிகளின் ஓட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~
உடையை உதிர்த்து
கூடு விட்டு விலகும்
உயிருக்குள் ..
தினசரி திரண்டு
இதயம் இயக்கும்
திரவியமாய்
இரத்தம் ...
காயத்தின் கண்ணிற்கு
வலிகளே புரிகிறது ...
வடிந்த ரத்த துளிகளின்
வல்லமை மறைகிறது ..
உயிர்வளி புணராத
ரத்தத் துளி நகராது
ரணமாய் வெடித்து
உறைந்து மடியும்
நொடியின் நுனியில்
மருத்துவம் நுகரும்
மகத்துவம் ரத்தமொன்றே ...
விபத்தின் வளைவில்
மோதலை விதைத்த
உடல்களின் திரவம்
தீர்ந்தப் பொழுதுகளில்
உயிரை மீட்பது ரத்தமொன்றே...
ஊசிகளின் உதடுகள்
தோலைத் துளைத்து
முத்தமிட முனைவதும்
குருதி காக்கும் குணங்கள் ..
உழைப்பால் உருவாக்கிய
பணத்தை கொடையாய்
கொடுக்க மறுத்தாலும் ..
உடல் சுரக்கும்
குருதித் துளிகளை தானமாய்
கொடுக்கும் நரம்புகளே
உயிரின் நகலை உள்வாங்கும் ..
நிலைபெறும் நிமிடம்
நீந்தினாலும் , நிறைந்தாலும்
உலவத் துடிப்பது உயிரே ..
உயிரேந்திய உடலின்
நகர்த்தலும் , நுகர்தலும்
ஓடுகின்ற துளிகளின்
ஓட்டம் சார்ந்தது ..
ஓரினத் துளிகளை
வழங்கும் வழிகளில்
போகும் உயிரை
பிடித்துக் கொடுக்கும்
நடமாடும் கடவுளாகிறாய் ...
- இராஜ்குமார்