தாயின் புடவை - சித்ரா
எல்லாமே எறிஞ்சு போக அவ நெனவுல இருக்குற ஒரே சேல
எழுத்தறிவு இல்லாதவ அன்ப மட்டும் எழுதிக் கொடுத்த அழகிய ஓல
வழிஞ்சு வர கண்ணீர தொடச்சு விட, தாய் அவ இல்ல
வாட காத்துல இதம் தர, இந்த சேல போல வேறயில்ல
தும்பும் போதும் அதுதான்
துன்பத்தின் போதும் அதுதான் - நா
தூங்கும் போதும் அதுதான்
தனியா இருக்கறப்ப, தலையணையில வச்சுப் படுத்திகிட்ட
தாயிகிட்ட சொல்லுற கதைய, சேலக்கிட்ட சொல்லிக்கிட்ட
மனைவி சேல கூட, மனசுல இப்படி நெலைக்கலையே
புருஷஞ் சட்ட ஏனொ, இவ்வளவு பொக்கிஷமா தெரியலயே
வாசம் இது போல, வண்ண பூவுல வீசலயே
காசு பணம் இந்த பாசத்த எப்பவுமே தரலயே
யாருமே இல்லாத அறையில உறவா நிக்கிற உடையிது
உடையில ஒளிஞ்ச உருவங் காணாம உசிரு கொஞ்சமொடையிது
என்னையும் சேத்து எடுத்துட்டுப் போயிருக்கலாம் அந்த சாமி
நண்பகலும் இருட்டா போயி நரகமா ஆச்சுது ஏம்பூமி..