பூமியின் தவம் -ரகு

பூமி தவமேற்கொள்கிறது

யாதொரு கோள்களிலுமில்லாத
ஜீவராசிகள் தன்னகத்தே நிலைத்திருக்க

சூரியஆயுள் நீட்டித்திருக்க
ஓசோன் சற்றே வலுப்பெற

சேமித்துச்சேமித்து
மேகம் மழைப்பொழிய

பூமி தவமேற்கொள்கிறது

நிலம் பரவாமல் கடல்நிதானிக்க
பனிமலைகள் பத்திரப்பட

நீர்வீழ்ச்சிகள் கணக்கெடுப்பில்
ஒன்று குறையாதிருக்க

ஆறுகள் ஒற்றையடிப்பாதையாய்
ஒளிந்து போகாமலிருக்க

காடுகள் காணிநிலங்கள்
கட்டிடங்களாகாமலிருக்க

பூமி தவமேற்கொள்கிறது

யாரங்கே மனிதா நீயா?

பூமியின் தவம் கலைக்க
நீயே முதலாளாய் வரிந்துகட்டுகிறாய்

கோடி ஆண்டுகளுக்குமுன்
உன்னுயிர்ப்பில் கர்வப்பட்டிருக்கலாம்
இந்த பூமி

ஆனால்

இழப்பின் மொத்தங்களாய்
இருப்பில் மிச்சங்களாய்

நீளும் பாதிப்புகளில்
நிலைப்பது யாதெனும்
குழப்பங்களாய்........

பூமியின்நிலை தள்ளியவன் நீயே

பூமியை அழித்து ஆக்கம் பெறுகிறாய்
ஆக்கம் பெற்றதில் பூமி அழிக்கிறாய்

காற்றில் மாசு கலக்கிறாய்
காடுகளைக் களையெடுக்கிறாய்

எந்திரக்குப்பைகள்
எங்கும் இரைக்கிறாய்

வெப்பமயமாதலுக்கு அடிகோளுகிறாய்

சிற்றுயிர்கள் சிதையச்செய்கிறாய்

அணுகுண்டுவீசி அமிலம் தெளிக்கிறாய்

போதும் மனிதா நிறுத்திக்கொள் -உன்
நீள்கொடுமையை

இரவு பகல்
இம்மியும் மாறாதிருக்கட்டும்
வெப்பம் மழை
சராசரியில் தொய்விலாதிருக்கட்டும்
நயாகரா வற்றாதிருக்கட்டும்
இமயம் ஆல்ப்ஸ் -ஐ
கடல் விழுங்காதிருக்கட்டும்

காயாத ஆறுகள்
கொத்துக் கொத்தாய்க்காடுகள்
நீளாதக்கடல்
நிறைவான வாயு
மாய்ந்திராமல் உயிர்கள்
மண் பரிசுத்தம்

இன்றன்றி என்றும் நிலைக்கவே
பூமி தவமேற்கொள்கிறது

யாரங்கே சுள்ளிபொறுக்கும் மேய்ப்பனா
முள்ளிட்டுச் செடி சாய்த்துவிடாதே

உயிர்ப்பிலல்ல மரிப்பில்தான்
களையக்கூடுமாம்

பூமியின் மாதவம்

எழுதியவர் : அ.ரகு (27-Dec-14, 7:52 pm)
பார்வை : 71

மேலே