பெற்றவருக்காக இதுவரை எழுதவில்லை

உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டிய பாதைகள்
எவரால் அடைபட்டுப்
போனது...
உன் தாலாட்டோடு
நானும் முனங்கிட
வேண்டிய
பிழையான வரிகள்
எப்படி அழிந்து
போனது...
உன் தோளேறி
சுற்றிப்பார்க்க வேண்டிய
திருவிழாக்கள்
எப்போது முடிந்து
போனது...
உன் கால்பிடித்து
தூக்கச்சொல்ல வேண்டிய
என் பிடிவாதங்கள்
எங்கே விட்டுப்
போனது...
யார் செல்லம் நீயென
கேட்டு பெருமைப்பட
வேண்டிய நேரங்கள்
எங்கே தொலைந்து
போனது...
நடுநிசியில் நான் விழித்தால்
கால் வலிக்க எனை சுமந்து
நீ நடக்க சொகுசாய்
உன் கைகளில் நானுறங்கிட
வேண்டிய இரவுகள்
எவ்வாறு விடிந்து
போனது...
ஊசி போடுகையில்
வலியால் நானழ
நீயும் அழுதுவிட
வேண்டிய
குளிர் காய்ச்சல்கள்
வரும் காலங்கள்
என்று கடந்து
போனது...
ஏத்தம் தடக்கம்
யானை சவாரி
டி காட்டிட வேண்டிய
விளையாட்டுகள் எல்லாம்
எங்கோ மறைந்து
போனது...
நடக்கும் வயதில்
கால் கொலுசு மாட்டி
அதன் சத்தம் ரசித்திட
வேண்டிய நாட்கள்
எங்கு தடைபட்டுப்
போனது..
இதிலேதும்
கிடைக்கப் பெறாத போதும்
இத்தனை பாசம்
உன்மேல் எனக்கெதற்கு...
என் இளவரசி
என்றிடாது
"ராஜா" என்பாய்
அழைப்புகளில்கூட
கர்வம் சேர்ப்பாய்
முடக்கிவிடாது...
உன்னை அறியாது
என் ரணங்களை
ஆற்றிக்கொண்டிருந்தாய்
வாழ்க்கை அனுபவங்கள்
மன எண்ணங்கள்
நகைச்சுவைகள்
பரவும் உரையாடலின்
வழியாக...
பிரச்சனை பாரமென
எதையும் பகிர்ந்ததில்லை
உன்னிடத்தில்...
அறிவேன்...
நானாக சமாளித்து
வெளிவரவே நீ
விரும்புவாய்...
என்
முகம், நிறம், சாதி,
வயது, வசதியென
எதுவும் அறியாது
நீ கொண்ட அன்பிற்கு
கொஞ்சம் குறைச்சல்தான்
சொந்த பந்தங்களும்...
வாழ்வியலின் வரிசைகள்
அணுகுமுறை அறிவு
ஆற்றல் என்றாய்...
நல்லதை கொடுத்தால்
நல்லதே கிடைக்கும்
என்பாய் ...
வியக்கிறேன்
உனது எளிமையில்...
உனக்கு
மகளாகும் முன்பே
சக மனுஷியாகி
இருந்தேன்...
அதுதான் நீ...
அன்று ஏதோ
குழப்பத்தில் கேட்டேன்..
"நான் பேசாம போய்டா
என்னை மறந்திடுவியாப்பா"
எனத் தயக்கத்தோடு...
பதிலை
கேள்வியில் செருகினாய்
"நீ என்னை மறந்திடுவியா.."
என்று எளிதாக...
அன்பின்
ஏக்கம் புரிந்து
"என் முதல் குழந்தையே"
என்றது ஆறுதல் மொழிதான்
என்றாலும்....
அதுவே "போதும்பா"
என்னில் ஓடுவது
உன் இரத்தமல்ல...
ஆனால் செயலொன்றே...
என் அடையாளம்
உன் பெயரின் முதலெழுத்துமல்ல...
ஆனால் உறவுவுயர்ந்ததே...
பெற்றவருமல்ல...
வளர்த்தவருமல்ல...
ஆனாலும் உரிமையில்
குறையில்லை...
தனித்து நிற்க
தன்னம்பிக்கை தந்து
வழி காட்டும்
தகப்பன் நீ...
எவ்வளவு சொன்னாலும்
சொல்ல சொல்ல
விளக்க முடியாமல்
முடிவின்றி நீளும்
சிறு வார்த்தைதான்
என் "அ...ப்......பா......."
அதன் பொருள்...
......என்......ராம் அப்பா.....