சதுரங்கம்

சூதாட விரியும்
உனது
மாய சதுரங்கத்தில்
தவறி விழும்
சோழிகள்
திரும்பி உருள்கிறது !

ஒவ்வொரு
சோழியின் தலைமாட்டிலும்
காலடியிலும்
இறப்பின் தருணங்களில்
அல்லாடும்
எண்கள்-
வெடித்துச் சிதறுகின்றன
கண்ணகியின்
காற் சிலம்புப்
பரல்களென !

தர்மங்களின்
கரங்கள் கூட
சகுனியின் விரல்களென
பகடையுருட்ட
சதியும் சூதும்
ஒட்டிப் பிறந்த
ரெட்டைக் குழந்தைகளென
சதுரங்கக் கட்டங்களுக்குள்
தவழ்ந்து திரிகின்றன !

நகர்த்தலின்
சூழ்ச்சிச் சூதுகளில்
சிப்பாய்கள் சிதறியோட
யானைகள் குதிரைமுகம்
கொண்டும் -
குதிரைகள் துதிக்கையோடும்
ராணியை துவசம்
செய்து
ராஜாவை
வெளியேற்றுகின்றன !

ஆயுதத்தின் பலம்
புத்தியின் கூர்மையோடு
விரல்களில்
விளையாடுமெனில்
சதுரங்க வீணையில்
எந்த ஸ்வரம்
அபஸ்வரமோ ?

எழுதியவர் : பாலா (30-Dec-14, 8:37 pm)
பார்வை : 418

மேலே