தங்கத் தண்டு ----பாகம் 8 ----------- மர்மத் தொடர்

...........................................................கி.மு. ஐம்பதாம் வருடம்..............................................................

அம்பல சித்தர் அந்தக் குகையின் பாறைப் பலகையில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டார். அதற்கு நேர் கீழே திருமுடியான் வெட்டிய சுரங்கம் புறப்படுவது அவருக்கும் திருமுடியானுக்கும் மாத்திரமே தெரிந்த ரகசியம்!

“ சுதர்சனா, என் பிரிய சீடனே, இந்தக் குகையில்தான் உனக்கும் திருமுடியானுக்கும் நிறைய அப்பியாசங்கள் கற்றுக் கொடுத்தேன்; நான் இந்தக் குகையிலேயே ஜீவ சமாதி அடைய விரும்புகிறேன்; இந்த ஓலைச்சுவடிகளும், குளிகைகளும் காலத்தால் அழியாமல் இங்கு பத்திரமாக இருக்கும். என் சீடர்கள் அல்லாது பிறர் கைவசம் இவை அகப்படாதிருக்கட்டும்! இது என் வாக்கு!

“ சுதர்சனா, ஒரு பாறாங்கல்லைப் புரட்டி குகை வாயிலை அடைத்து விட்டு தேசாந்திரியாகச் சென்று விடு! கற்று, கற்பித்து வாழ்!


புதுச்சேரி தொழில் நுட்ப பூங்கா

தாய் வர்ணாவின் எதிரில் அமர்ந்திருந்தான் அந்தரீஸ். ரகசியம் பேசத் தோதான இடமென்று அழைத்திருந்தாள் தாய்.

உடனே விஷயத்துக்கு வந்தாள்.

“ அந்த சிற்பத்தில சென்சார் உண்டு அந்தரீஸ்! திருடனே ஆனாலும் தேவி பாதத்துல கை வச்சு ரேகையை ரெஜிஸ்டர் பண்ணிட்டா எவ்வளவு தப்புத் தப்பா முரட்டுத்தனமா பீடத்தை அமுக்கினாலும் கதையடி விழாது. அதைச் செய்யாம நேரடியா பீடத்துல கை வச்சா மூணு நிமிஷத்துக்கு எவ்வளவு தரம் தப்புத் தப்பா அமுக்கறாங்கறதை அது சென்ஸ் பண்ணும்; கூடவே வேர்வையையும்! முதல்ல ஹ்ம்ம்னு வார்னிங் சிக்னல் வரும்! அப்புறமா கமாண்ட் பாஸாகி போட்டுத் தள்ளிடும்! இதுல இன்னொரு விஷயம்; கதை ஓரளவுதான் கனம், ஆனா இங்க அடி பலமா விழக் காரணம் அது இறங்கற வேகம்தான். சட்டுன்னு அடிச்சிட்டு சடார்னு எழும்பிடும்; அடிபட்டவனுக்கு எது அடிச்சதுன்னு கூடத் தெரியாது.”

“ அப்படியா? ”

“ எல்லாம் ஸ்கூல்ல படிச்ச சங்கதிதான். E= mc2 கனமில்லாத பொருளையும் வேகத்தை அதிகப்படுத்தி வேண்டிய விளைவைக் கொண்டு வரலாம் ”

தாத்தா தன் கையைப் பற்றி காலடியில் வைத்ததை நினைவு கூர்ந்தான் அந்தரீஸ்!

“ ஒவ்வொரு தடவையும் ரெஜிஸ்டர் பண்ணனுமாம்மா? ”

“பத்து வருஷத்துக்கு ஒரு தடவை போதும்; நம்ம வீட்டுல எல்லோருமே ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க!”

அதனால்தான் பாட்டிக்கு மொத்து கிடைக்கவில்லை!

“ ஆனா அம்மா, பாட்டி சரியான எழுத்தைச் சொல்லியும் பீடம் ஏன் எழும்பலே? ”

“அது பாட்டிக்கே தெரியாத ரகசியம்! பத்து எழுத்துக்கள்ல பத்து விரலை வைக்கணும்- பீடம் அதை சென்ஸ் பண்ணும். ரெண்டு கட்டை விரல் ரெண்டு சுண்டு விரலை மாத்திரமே அமுக்கணும். பக்கத்திலேர்ந்து பார்க்கிறவங்களுக்கு பத்து விரலாலேயும் அழுத்துறது மாதிரியே தெரியும். கீ போர்ட் அழுத்துற மாதிரி சாப்ட்டா அமுக்கினாலே போதும்! பீடம் எழும்பிடும். இதெல்லாம் தப்பான நோக்கத்தில திருட வர்றவன் செய்வானா என்ன? ”

ஓ! சைகாலஜியும் எலக்ட்ரானிக்ஸூமா?

வர்ணா அந்தரீஸை பிரியத்தோடு பார்த்தாள். கண்கள் எங்கோ மிதக்க, மென் முறுவலுடன் சொன்னாள். “ சின்னப் பிள்ளையில நீ அந்த பீடத்திலதான் விளையாடிட்டிருப்பே! எழுத்துக்கள போட்டு மிதிச்சு துவைப்பே பாரு, பீடம் வாயிருந்தா அழுதுடும்; இதுல அப்பப்போ மூச்சா வேற போயிடுவே! ”

தாய் விரல் ரேகைகளை ரெஜிஸ்டர் பண்ணுகிற முறையைப் புகுத்தியதே தனக்காகத்தான் என்று உணர்ந்து கொண்ட அந்தரீஸ் வெட்கமும் பெருமிதமும் அடைந்தான்!!


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நரேன் கவலையில் ஆழ்ந்திருந்தார். ஹெல்த் ப்ளஸ் நிறுவனம் நான்கு ஆம்புலன்ஸ்களையும் எரிபொருளையும் அவரிடம் பிய்த்து பிராண்டி வாங்கியிருந்தது. இலக்குகளையும் நிறைவேற்றி விட்டதாக ரிப்போர்ட் கொடுத்திருந்தார்கள். அதில் லாவண்யா தவிர மற்றவர்கள் கொடுத்த ரிப்போர்ட் அனைத்தும் போலி! காடு மேடெல்லாம் ஆம்புலன்ஸ் சுற்றுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்; ஆனால் மக்களின் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்று நிறைய புகார்...! அப்படியானால் வண்டியை வைத்துக் கொண்டு இவர்கள் என்னதான் செய்கின்றனர்? இவர்கள் நோக்கம்தான் என்ன?

ஒரு முடிவுக்கு வந்த நரேன் ஹெல்த் ப்ளஸ் நிறுவனத்துக்கு வழங்கியிருந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் நிறுத்தினார். அந்த நிறுவனத்தின் சேவை தன் மாவட்டத்துக்குத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் நேர்மையற்ற முறையில் இயங்குவதை ஆதாரத்துடனும் விளக்கி தமிழக அரசுக்கு எழுதினார். தமிழக அரசு அதனை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அங்கிருந்து அக்கடிதம் இங்கிலாந்துத் தூதரகம் போய் அப்படியே பத்திரமாக குப்பைக் கூடைக்குப் போய் விட்டது!


ஹெல்த் ப்ளஸ் நிறுவனத்தின் அலுவலகம்

விக்டர் மார்ஷல் லாவண்யாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான், “ மிஸ் லாவண்யா, இந்த பழங்குடி இன மக்கள் நாம எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் அலோபதி மருந்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. ஒரு வேளை இவங்களுக்குன்னு தனி மருத்துவ முறை ஏதும் இருக்கா? ”

“ தனி மருத்துவ முறை மாத்திரமல்ல, அவங்களுக்குன்னு தனி கலாச்சாரமே இருக்கு”- அப்பாவி லாவண்யா மார்ஷலின் உள்நோக்கம் உணராமல் பதிலளித்தாள்.

“ ஐ சீ, அப்ப நான் ஒரு ஃபார்மட் கொடுக்கிறேன். அட்லீஸ்ட் ஒரு நூறு ஆதிவாசிகளை இண்டர்வியூ பண்ணுங்க! அவுங்க சமூகம் எப்படிபட்டதுன்னு தெரிஞ்சிக்குவோம். அவுங்களோடது நம்ம வழக்கத்தை விட நல்லாயிருந்தா அலோபதியோட அதையும் நாம எடுத்துக்கலாம், சரியா? ” படிவத்தை நீட்டினான்.

லாவண்யா படிவத்தில் கண்களை ஓட்டிளாள்- தாய்சேய் நலம், மதம், தொழில், பிரசவம், திருமணம், ரசவாதம், முதியோர் பராமரிப்பு, மரணச் சடங்கு......

“சரி சார்,” படிவத்தை வாங்கிக் கொண்டாள், தன் மரணத்தை வாங்கியதை உணராமல்!



தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (31-Dec-14, 12:05 pm)
பார்வை : 117

மேலே