கவிஞனா நீ - கருணா

கவிதை எழுத ஆசை
ஆனால் இலக்கணமும்
தெரியாது ..
எதுகை மோனையும்
அறியாது ..
எப்படி எழுதுவேன்
என்றேன் ..தமிழ் அன்னையிடம் !
கற்பனை செய்து பார்
வரும்..என்றாள்!
காதலி ஒருத்தி இருப்பதாய்
எண்ணினேன் ..
காதல் வரிகள் வந்து விழுந்தன !
அவளைக்
கை பிடிப்பதாய் நினைத்ததும்
விழுந்த வரிகள் எழுந்து நின்றன !
காதலில் தோல்வி ஆனதென்று
எழுதிப் பார்த்ததில் ..சோகம் சொற்களாயின !
எங்கோ கேட்ட நல்ல தெல்லாம்
நினைவில் வர..தத்துவ மொழிகளாயின..
எதிரியென எவரையும் எண்ணும் வழக்கமில்லை ..
என்ற போதும் ..கற்பனையில் எதிரியாக
அரசியல்வாதியையும் .. அங்கொருவர் ..
இங்கொருவர் என எதிரிகளாய் பாவித்து
எழுதிப் பார்த்தேன்.. கனல் தெரிந்தது..
குறும்புகளும் குழந்தைகளும் நெஞ்சில் வர
வயது தொலைந்தது !
படைப்புகள் நான்கு மாதங்களில்
நானூறை நெருங்கியது !
ஊக்கம் தந்த நல்ல உள்ளங்களுக்கு
நன்றி சொல்ல நேரம் வந்தது !
கவிதைகள் இவை எனக் கூறக் கேட்கையில்
மகிழ்ச்சி வந்தது..
தமிழன்னையை நிமிர்ந்து நோக்கினேன் ..
கண்களில் பயம் தெரிந்தது ..
அப்பா..போதுமே ..என்று
புன்னகையுடன் அவள் சொல்வது போலிருந்தது !
கடக்கும் ஆண்டு ..என்னையும்
கவிஞனாக்கி விட்டு செல்கிறது !
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
- கருணாநிதி சண்முகம்

எழுதியவர் : கருணா (31-Dec-14, 9:24 pm)
பார்வை : 63

மேலே