வருக புத்தாண்டே

வருக புத்தாண்டே
ஆண்டே! வருக! - மேலும்
ஆள்பவளே வருக! - எங்களுக்கு
ஆனந்தம் தருபவளே வருக!

கடந்த ஆண்டுகள் எல்லாம்
கல்லை விழுங்கியக்
கடலாய்க் கரைந்துப் போனது.

படிகாரங்கள் கற்கண்டுகளாய்
பதம் பார்த்ததுப் போல்
இதம் பாராமல் சென்றது ஆண்டுகள்.

கடல் விழுங்கியக்
கதை எல்லாம் போய்
சதை விழுங்கும் சண்டாளர்கள்
சாதனையாளர்களாய்
சாதிக்க வைத்தது அந்த ஆண்டுகள்.

இனி
இவையெல்லாம் உன் ஆண்டில்
இல்லாமல் மறைந்துப் போகட்டும்.

நீ வருவதற்கு முன் - எங்களின்
நிம்மதியையும் அரித்துவிட்டது
சென்ற ஆண்டுகள். - ஆம்

வந்தோரை வரவேற்று - தேநீர்
விருந்தளிக்கவும் தேவையான
பால் விலையும் ஏறிவிட்டது.

இருட்டில் தவித்த வீடுகளில்
இலவச மின் இணைப்பும்
உல்லாசமாக எரியாமல்
மின்வெட்டில் மழுங்கிவிட்டது.
மின் விநியோக உபயோகக்
கட்டணமும் உயர்ந்துவிட்டது.
இன்னும் நாங்கள் உயரவே இல்லை.

நீண்ட தூரப் பயணிக்கவும்
நாலுக் காசும் எங்களுக்கில்லை.
பேருந்துக் கட்டணமும்
ஏறிவிட்டது. - இன்னும் நாங்கள்
ஏற்றமிகு வாழ்க்கையில் வாழவே இல்லை.

அரசுப் பணியில் இருந்தாலும்
அரசுக்கு செலுத்தும் வரியும்
அகலவே இல்லை. - சென்ற
ஆண்டில் இரு அரசும்
அரசுப் பணியாளர்களுக்கு
அள்ளித்தந்த சம்பளமும்
போதவில்லை. - இரு அரசும்
கொடுப்பதைப் போல் கொடுத்து
கெடுப்பதற்கு திட்டம் தீட்ட
வைத்தது சென்ற ஆண்டு.

வெறும் கையாலே முழம் அளந்தாலும்
பூவாசம் வீசுமா? - சொல்லாலே
சொக்கவைத்தால்
சொர்க்கம் தான் தெரியுமா?

வெறும் கையாலே முழம் அளக்கும்
பூக்காரனைப்போல் - ஆசைகளை
சொல்லாலே சொக்கவைக்கும்
சூன்யக்காரனைப் போல்
சூன்யத்தை சூழவைத்தது
சென்ற ஆண்டு. - நீயாகிலும்
சுகமான நாட்களை
சுமந்து வா! - எங்கள்
சோகத்தை சொட்டெரிக்க வா!

ஏழைப் பாழைகளும்
ஏற்றம் காண ஏணியாக மாறி வா!
ஏளனமும், கேலியும் செய்யும்
ஏமாற்றுக்காரர்களை
எட்டி உதைக்கும் ஆண்டாக
ஏற்றமுடன் பிறந்து வா!

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (2-Jan-15, 5:13 am)
சேர்த்தது : s.sankusubramanian
Tanglish : varuka puthaande
பார்வை : 3608

மேலே