நிலை தடுமாறும் நுகர்வோர்

வானம் பார்த்து
பூமியில் விதைத்து
விளைச்சல் வந்தவுடன்
சரடுவண்டி பூட்டி
சந்தைக்குப் போய்
கத்தரிக்காய் கொடுத்து
கருப்பட்டி வாங்கிய
பண்டமாற்று ...
பழையதாயிற்றே..?

கருவறை முதல்
கல்லறை வரை
கழியும் காலத்தில்
கடனுக்கும் ...காசுக்கும்
பொருள்பெற்றால்
பூமியிலே
புதியதாயிற்றே ..?

நுகர்வோரே !
சிந்திப்பீர் ...

கோடிகளில் புரளும்
விளம்பரம் ...

ஒன்றுக்கு ரெண்டுதரும்
தந்திரம் ...

ஓசுக்கா கடைவிரிப்பான்
வியாபாரி ...

உன் காசுக்கே குறிவைப்பான்
நீ அறி ...

உற்பத்தி பொருளெல்லாம்
உனைத்தானே குறிவைக்கும் ..

ஒன்றுக்கு ..இரண்டென்று
உன் தலைமீதே ...உலைவைக்கும் ..

காசுகொடுத்து
பொருள் பெறுவாய்
நீ ...கலியுகத்தில் ...

காசுபெற்று
பொய்யுரைப்பான்
அவன் விளம்பரத்தில் ...

நுகர்வோரே ..

பொருளின்
முடியும் காலம்
முன்பே அறி ...

வாங்கும்முன்
பொருளின்
தரம் அறி ..

உன் அங்கமே
தங்கமாய் ஜொலித்தாலும்
தங்கமென்றால் வாய்ப்பிளப்பாய்..

மலிவு விலையெனில்
மடிசுமப்பாய் ..?

ஆடி வந்தால்
கொண்டாட்டம்தான் வியாபாரிக்கு ...

வரும்முன்னே
திண்டாட்டம்தான் சம்சாரிக்கு ..

பிச்சையாக
எதையும் ...நீ
யாசிக்கவில்லை ...

தரம் ..
உறுதி ...
உழைப்பு...

தராத பொருள்
தள்ளுபடியில் வந்தாலும்
தள்ளி வை ...

உன் காசின் ...வலி உணர் ...
உன் உழைப்பு
உன் பணம்
உன் பொருள்

விளம்பரங்கள் வெறும்
விழித்துடைப்பு ...

நீதான் தீர்மானிக்கிறாய்
பொருட்களின் புனிதத்தை... !

உன் மூலமே முதலாளிகள்
அவர்கள் ...

கண்திற...
கழிசடைகள் கழி...
உன் வியர்வைத்துளியின்
வலி உணர் ...

நுகர்வோரே
நிலைதடுமாறாதீர்
உம் நினைவுகள்
பறிக்கப்பட்டுவிடும் ...!

நுனி நாக்கில்
எம்மொழி பேசினாலும்
சொல்லும் தரம் இல்லையெனில்
செல் ...நீ
நியாயத்தின் ...நீதிகேட்டு ..

தட்டுங்கள் திறக்கப்படும்...
மனித உரிமைகள்
மகத்தானவை ...

மகாத்மாவின் பார்வையிலும்
மகத்தானவர் ...நீவிர்தான்

வாங்கும் பொருளுக்கு
வரவுச் சீட்டு ...உடன்பெறு..

களவாடப்படும்
கரன்சிகள் வெளிப்படட்டும் ...

கருப்பும் வெள்ளையாகும்
காலங்கள் கனிந்துவிட்டால் ...

காவியத்தில் மட்டுமல்ல
"கலியுகத்திலும் வல்லரசாம்"
இன்றே எங்கள்...இந்தியா !

---------------------------------------------------------------------------------------------------------------------------
( தளத் தோழர்கள் , தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் )

அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (2-Jan-15, 8:56 am)
பார்வை : 3456

மேலே