வரம் கேட்கும் தேவதைகள்

சோர்ந்து போகிறேன் சுவராகத் தாங்கு,நான்
சிலிர்த்தால் தூக்கு சிறகாய் - சேர்ந்துனைச்
சார்ந்து படருமிச் சராசரிக் கொடிக்குநீ
சொர்க்கம் அனுப்பிய தேர்

மைதொட்டுக் கொடுஒரு மனக்கவிதை எழுதவே
மெல்ல பேசுபின் மடிதந்து -- மென்பட்டுக்
கைவிரல் என்தலை கோதவே உன்கனாக்
கண்களால் தூங்குமென் கண்

இதழ்களி லாலென்னை இழுத்தொரு மிருகமாய்
மதுரக்கள் ளூற்றி சாய்ப்பாய் - இடிந்துநான்
விழுகையில் அன்னையாய் வாரித் தழுவுமோர்
அழகு தேவமகள் நீ

ஊதாப் பூவாய் கண்சிமிட்டி யேஎனை
ஏதோ செய்தாய் இமையால் - நீதானே
உலகையே கரைத்தென் உயிரினுள் அமுதமாய்
ஊற்றி நிறைத்த உறவு

துயரத் தீவுகளில் சிரிப்புகளை வீசியே
தோணிகள் செலுத்தி கடந்தோம் -உயிர்த்தநல்
மகிழ்ச்சிக் கணங்களை கண்ணீரை யழுது
ருசித்ததே நம்காதல் மலர்

சுகமாய் இல்வீணை சுரக்கும் ராகங்கள்
சொர்க்கத்தில் சென்று சேருமாம் - சகீ,நம்
வசந்த காலத்துப் பூக்களை தேவதைகள்
வரங்களாய் சூடும் பறித்து

("அழகான பிழைகள் " என்ற வெண்பா முயற்சியில் என் மனைவிக்கு மனம் எழுதியது)

எழுதியவர் : கவித்தாசபாபதி (2-Jan-15, 10:21 am)
பார்வை : 180

மேலே