நூற்றாண்டுக்கவிக்குயில் குசாகிருஷ்ணமூர்த்தி

நூற்றாண்டுக்கவிக்குயில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
முனைவர் மா.தாமோதரகண்ணன் அலைபேசி-9442663637
கு.சா.கி. நான்குசுவர் பள்ளிக்குப் புள்ளி வைத்தார்
வாழ்க்கையை நான்கு திசைகளில் படித்து வைத்தார்
அவற்றைத்தான் பாட்டில் சொல்லிவைத்தார்.

கு.சா.கி. இளம்வயதில்
காதலியோடு காதலோடு
நாடுவிட்டுச்சென்றார்..வென்றார்.
அவர் காதலியின் பெயர்
‘‘ தமிழ்நாடகம்’’

தமிழ்நாடக வரலாற்றில்
பாதிஅத்தியாயம் பலரை உள்ளடக்கியது
மீதிஅத்தியாயம் கு.சா.கி.யை உள்ளடக்கியது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை
கு.சா.கியின் தலைநகர் புதுகை
முதலில்
கு.சா.கி.யால் புதுகை புகழ் பெற்றது
பிறகுதான் புதுகையால் கு.சா.கி. புகழ்பெற்றார்.

‘‘பெரியோரை வியத்தலும் இல்லை
சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை’’
என்பது சங்கஇலக்கிய மரபு
எளியோரைத் தாழ்த்தலும் இல்லை
வலியோரை வாழ்த்தலும் இல்லை
என்பது கு.சா.கி.யின் வாழ்க்கை மரபு.

மேடை நாடகத்தாய் திரைப்படக்
குழந்தைக்குப்பாடலைப் பரிசளித்தாள்
கொட்டும் முரசாய் தேன்சொட்டுகிறது
குற்றம் புரிந்தவன்….. பாடல்
கு.சா.கிக்கு நூற்றாண்டு விழா எடுக்கா விடில்
நாங்களும் குற்றம் புரிந்தவர்களே.

வரவுஎட்டணா…செலவுபத்தணா பாடலுக்கு
அடியெடுத்துக் கொடுத்தது கு.சா.கியின்
‘‘ அஞ்சுரூவா நோட்டைக் கொஞ்சம்முன்னே
மாத்தி மிச்சமில்ல காசு மிச்சமில்ல… ’’
இந்த உண்மையைச்சொல்ல எனக்கு அச்சமில்ல.


என். எஸ். கிருஷ்ணனுக்குக்
கலைவாணர் நாடகம்நடத்தி
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனாக மாற்றியதும்
உவமைக்கவிஞர் சுரதாவையும் கு.மா.பாலசுப்பிரமணியத்தைத்
திரையுலகிற்கு ஏற்றியதும்
தங்கவேலனை திருச்சிபாரதன் எனப்
பெயர் சூட்டியதும்
வகிதாரஹ்மானை திரைஉலகிற்கு
அறிமுகப்படுத்தியதும்
கு.சா.கி.யின் சிறியகொடை
கு.சா.கி.யின் அன்புள்ளமே
தமிழகத்திற்குக் கிடைத்த பெரியகொடை.


குமரியைக் காதலிக்கச் சொல்லிப் பாட்டெழுதும்
பாடலாசிரியர் மத்தியில் கு.சா.கி. ஒருவர் மட்டும்
கிழவியைக் காதலிக்கச் சொல்லிப் பாட்டெழுதியவர்
தமிழ்க் கிழவி ஔவையைக் காதலிக்கச் சொல்லிப் பாட்டெழுதியவர்.

ஆண்களைக் குதிரையில் ஏற்றி
அழகு பார்த்த திரையுலகில் கு.சா.கி.
பெண்படத்தில் ஒரு பெண்ணை வைஜெயந்திமாலாவை
குதிரையில் ஏற்றி அகிலபாரதப் பெண்கள் திலகமாக்கினார்
அன்று எம்பி எம்பி ஓடிய குதிரை கடைசியில்
இந்தியப் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இடம்பிடித்தது.

இயல் இசை நாடகம் திரைப்படமென
அவ்வப்போது கு.சா.கி. இடம் மாற்றியபோதும்
ஒருபோதும் தமிழைத்தடம் மாற்றியதில்லை.

கு.சா.கியின் அந்தமான்கைதிக்குப் பின்னரே
ஆண்மான் எம்.ஜி.ஆரிடம்
அதிக ரசிகப்பெருமக்கள் கைதிகளானார்கள்
தமிழகமுதல்வரைத் தந்த
தமிழ்முதல்வர் கு.சா.கி.

காதலுக்கு விளக்கத்தை கு.சா.கியைப்போல்
உலகக்கவிஞர்கள் ஒருவரும் சொன்னதில்லை
‘‘ சொல்லாலே விளக்கத் தெரியலே-அதைச்
சொல்லாமலும் இருக்க முடியல..’’
காதலுக்கு விளக்கத்தை கு.சா.கியைப்போல்
உலகக்கவிஞர்கள் ஒருவரும் சொன்னதில்லை
இசையரங்குகளில்
தெலுங்கு இசைப்பாடல் மேடைக்கு
நேர் எதிரில்
தமிழிசைப் பாடலுக்கு மேடைபோட்டார்
கு.சா.கி. தமிழிசைப் பாடல் உலகில் ராஜநடைபோட்டார்.

நூற்றாண்டு விழாவையும் ஆயிரமாவது ஆண்டுவிழாவையும்
தமிழ்க்கவிஞர் பெருமன்றம் கொண்டாடுவது நிச்சயம்
இதுவே கலைமாமணி பொன்னடியாரின் இலட்சியம்.

எழுதியவர் : damodarakannan (4-Jan-15, 8:12 am)
பார்வை : 76

மேலே