சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015

மதம்பிடித்த சாதியை மண்ணொடு மண்ணாய்
வதஞ்செய்து தீயிலிட வாராய் ! - அதர்ம
மழித்தல் தவறல்ல மானுடா சாதி
ஒழித்திட இக்கணமே ஓடு .

எண்சாண் மனிதருள் எத்தனை சாதிகள்
பெண்ஆண் இரண்டுபோதும் பூமியில் - எண்ணிலா
சாதியால் சர்ச்சையொடு சண்டைக ளேராளம்
போதிக்க ஏற்பாய் பணிந்து .

ஊனமாகும் சாதிகளும் உள்ளத்தி லன்பூற
ஈனமான செய்கைகளும் ஈர்க்காது - தேனமுத
சொற்களா லாக்கலாம் சொர்க்கமாய்த் தாய்மண்ணை
அற்புத மாகும் உலகு .

மூர்க்கனாக்கும் சாதிவெறி முட்டிமோத வைத்திடும்
கூர்வாளும் பேசும் குருதியோடும் - சீர்மிகு
வாழ்வு நிலைகுலையும் வாட்டமே மிஞ்சிடும்
பாழ்வெறி தேவையோ சொல் .

சாதிவெறி கொண்டலைந்தால் சாதித்தல் சாத்தியமோ
நாதியற்றுப் போவதும் நன்றாமோ - மேதினியில்
நீதிநேர்மை கண்மறைத்து நீசராக்கும், வீதியில்
மோதியே சாவார் முனைந்து .

காவுவாங்கும் சாதிக்கு கல்லறைக் கட்டிடு
ஏவுகின்ற வஞ்சகரை ஏய்த்திடு - பூவுலகில்
சாதித்தீ பற்றிடாது சன்மார்க்கம் போதித்தால்
சாதிப்பாய் நிச்சயம்கண் கூடு .



( இப்படைப்பு நான் சொந்தமாய் எழுதியது என உறுதி அளிக்கிறேன் . )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Jan-15, 2:19 pm)
பார்வை : 187

மேலே