இப்படியும் நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி- 2015

அங்கம் தொடாது ஆழக் காதல் செய்வோம்
அங்கங்கே கொஞ்சம் அமர காதல் செய்வோம்
பங்கம் வராமல் பார்த்து காதல் செய்வோம்
பங்கு போட்டு பொன்னாய் காதல் செய்வோம்

அன்னை தந்தை அவரை காதல் செய்வோம்
அன்பு ஒன்றே கொண்டு காதல் செய்வோம்
பின்னம்வரும் தலை முறையை காதல் செய்வோம்
தென்னம் பாளைபோல சிரித்து காதல் செய்வோம்

தண்ணிழல் தருமே தருவை காதல் செய்வோம்
வெண்ணிலவு அதன் வெண்மை காதல் செய்வோம்
பண்ணிசை பறவைகள் பாடுவதை காதல் செய்வோம்
எண்ணிலா விலங்குகள் எல்லாம் காதல் செய்வோம்

காக்கை குருவி குஞ்சுகளை காதல் செய்வோம்
யாக்கை காக்க யாசிப்போனை காதல் செய்வோம்
நோக்கும் பார்வைநோகா வண்ணம் காதல் செய்வோம்
காக்குமன்பில் குருதிதரும் கனவானை காதல் செய்வோம்

கன்னியரை கன்னியரை கனிந்து காதல் செய்வோம்
என்றுமவர் ஏமாறா வண்ணம் காதல் செய்வோம்
மன்னவரை மன்னவரை மனமொத்து காதல் செய்வோம்
மன்மதன் அவனேயென்று மயங்கி காதல் செய்வோம்.

இப்படியே நாம் இயற்கையெலாம் காதல் செய்வோம்
எப்போதும் மறக்காமல் எதிரியையும் காதல் செய்வோம்
அப்போது வருமோ அவனியிலே ஆணவச் சண்டை
இப்போது ஏந்திடுவோம் பூக்களின் செண்டை -பூச்செண்டை .


காதல்= அன்பு ,பாசம்,நேசம்.,
தரு= மரம்


நானானவன் : சுசீந்திரன்
உ றையிடம் : சென்னை
விலாசம் : எண்:11, 9 -வது குறுக்குத்தெரு , பாலாஜி நகர், கொளத்தூர் , சென்னை -600099.
அலை பேசி : 9791652091.
இப்படைப்பு எம்மால் எழுதப்பட்டது , யாருக்கும் பாத்தியதை இல்லை என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்...


சுசீந்திரன்.5.1.2015

எழுதியவர் : சுசீந்திரன். (5-Jan-15, 9:40 pm)
பார்வை : 93

மேலே