நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதை போட்டி -2015

நீராருங்கடலுடுத்த நிலமடந்தை - அவள்
திலகத்தின் வாசனையை மட்டுமல்ல -இன்று
மலேயத் தமிழிட்ட மாலைசூடியும்
சிங்கப்பூர் தமிழளித்த சிலம்பணிந்தும்
கண்ணீர்த்துளி வடித்தாலும் இலங்கையின்
கண்மணித்தமிழ் கொடுத்த கண்மையிட்டும்
திரைகடல் கடந்த அரபுத் தமிழின் நறுமண
திரவியம் பூசியும் ஆங்கில பூகண்டங்களில்
மென்பொருள் இயற்றும் இளந்தமிழ் நெய்த
மென்துகில் உடுத்தும் பெருமிதம் கொள்கிறாள் !

தமிழினமே ! நீயிந்த மண்ணின் வெறும் கிணற்றுத்
தவளையல்ல ! கிணறே நீதான் உணர்ந்து கொள் !
காலத்தின் கட்டாயத்தால் ஆங்கிலம் பயின்று
சாதிக்க வேண்டி கடல் கடந்து சென்றாலும்
வாய்மொழி துவங்குமுன் உன் பிள்ளைகளுக்கு
தாய்மொழி ஊட்டு! அயல்நாட்டு தொலைக்காட்சி கூட
உன் வீட்டுக் குழந்தையோடு தமிழில் பேச - நீ மட்டும்
அவனுக்கு தமிழை ஏன் மறுக்கிறாய் ?

அறிவியல் வளருகையில் அறிவோடு நீயதற்கு
தமிழ்ச் சொற்கள் தேடி அறிவியலோடு இணைந்துகொள் !
உன் தமிழின் புகழறிந்து கற்க வரும் - மறுநாட்டு
அறிஞர்களை வீரமாமுனிவர்களாக்கு !அவனியின்
அனைத்து மொழி இலக்கியச்செல்வங்களையும்
அருந்தமிழாக்கம் செய் ! தமிழோடு நீயும் வாழ்வாய்!

எழுதியவர் : ஜி ராஜன் (7-Jan-15, 1:55 pm)
பார்வை : 152

மேலே