இப்படி நாம் காதலிப்போம்-தேவி -பொங்கல் கவிதை போட்டி
அலைபேசி தவிர்த்து
இணையம் இழந்து
தொலை தொடர்பை துறந்து
சற்று நேரம் சங்ககாலம்
நோக்கி பயணிப்போமா?
தலைவியின் தவிப்பு :-
தின்புயத் தோள்
திரண்ட மார்பு
கூர் வாள்விழி
பகை கொல்லும் வீரம்
மிகு என் மருத நில தலைவா !
மை பூசிய இருட்டில்
தீண்டும் அரவம் விடுத்து
கல்லுருட்டி கரை தாண்டி
வரும் காட்டருவி தாண்டி
கூர் பல்லோடு குதரிகிழிக்கும்
அரி, நரி தாண்டி
யான் காத்திருக்கும்
பூச்சொரியும் புன்னை மரம் தேடி
காண வரும் எம் தலைவா!
நின் ஏக்கத்தால்
என் கணையாழி
இடை யணியாக
இளைத்து போனேன்.
ஏக்கத்தை மஞ்சள்
பூசி மறைத்தாலும்
பசலை கொண்ட மேனி
கண்டு என் தோழி
உன்னை தூற்றுவதை
யான் எங்ஙனம் மாற்றுவேன்?
என்னை கண்டு இரங்கி
நின்னை தூற்றும்
என் சுற்றத்தை எங்ஙனம்
தேற்றுவேன்?
தூது சொல்ல யாருமில்லை.
வந்து சேரும் தூரமுமில்லை
என் நினைவுகளை தூது விடுகிறேன்.
காற்றினும் கடிது போய்
என் காதலை உரைத்திடுங்கள்.
தலைவன் தவிப்பு:-
பொருள்வயிட் பிரிந்து
போகாத காதம் கடந்து
நின் நினைவுகள் மட்டுமே
துணையாக வாழ்கின்றேன்.
இமை இரண்டும் கூடாமல்
இட்ட மென் பஞ்சணை
முள்ளாக உறுத்த
வாள்விழி மூடாது
பாலை நிலத்தில்
நெய்தல் கயலாய்
தவிப்பதை நீ அனுப்பிய
நினைவுகள் கூறின.
சந்தன மரத்தில்
படரும் பன்னீர் பூங்கொடியை
எனை கண்டதும்
என் மார்பில் படரும் கொடியே!
போர்களத்தில் எதிர்த்த
ஆயிரம் களிரை
வீழ்த்தி வென்றவன் யான்.
நின் இருவிழி நடத்திய
போரில் தோற்று
வீழ்ந்து விட்டேன்.
துயிலாமல் துவண்டிருந்தால்
எனை சாய்க்கும் விழிகள்
ஒளியிழந்து போகாதோ !
சிரம் மேற்கொண்ட வினைமுடித்து
விரைந்து வருவேனென்று
குறுஞ்சி குன்று நிகர்
நெஞ்சையும்
வீழருவி ஒத்த கூந்தலும் கொண்ட
என் தலைவியிடம் கடிது
போய் சொல்லுங்கள் நினைவுகளே!