+இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி 2015+
இறுதி வரை உறுதி கொண்டு
இருக்கும் வரை நெருக்கம் கொண்டு
இதயம் முழுதும் அன்பு கொண்டு
காதலிப்போமே...!
வாழும் வரை வாசம் கொண்டு
நாளும் பொழுதும் நேசம் கொண்டு
மேலும் மேலும் பாசம் கொண்டு
காதலிப்போமே...!
புன்னகை கவசம் ஒட்டிக் கொண்டு
பூந்தளிர் போல கட்டிக் கொண்டு
புதிதாய் இன்பங்கள் கூட்டிக் கொண்டு
காதலிப்போமே...!
உயிருள்ள வரை உண்மை கொண்டு
ஒவ்வொரு செயலிலும் நன்மை கொண்டு
உள்ளம் நிறைய நேர்மை கொண்டு
காதலிப்போமே...!
வருந்திய வேளையில் வலிமை கொண்டு
கலங்கிய காலத்தில் கருணை கொண்டு
கண்ணீர் துடைத்திடும் கடமை கொண்டு
காதலிப்போமே...!
இனிய பொழுதினில் கவிதை கொண்டு
இனிக்கும் பொழுதெலாம் தமிழைக் கொண்டு
இணைந்தே இன்பமாய் உரிமை கொண்டு
காதலிப்போமே...!