32 ஓட்டுப் போடாமல் இருக்காதே
ஓட்டுப் போடாமல் இருக்காதே! - நீ
*** உனது கடமையை வெறுக்காதே!
நாட்டை ஆள்வோரை நியமிக்கும்
*** நல்ல வாய்ப்பைநீ கெடுக்காதே!
தேர்தல் என்றால் அலட்சியமா? - அது
*** தேவையில் லையென்ற தலைக்கனமா? - *நீ
வாழ்தல் மட்டும் அவசியமா? - இந்த
*** வரிசையில் நின்றால் கேவலமா?
நாட்டின் குடிமகன் நீயில்லையா? - இங்கு
*** நடப்பதில் உனக்குப் பங்கில்லையா?
கேட்டைத் தடுக்க மனமில்லையா? - இங்குக்
*** கேட்பா ரற்றோர்க்குக் கதியில்லையா?
பாமரர் இங்கே பெரும்பான்மை! - அதைப்
*** பலிகடா வாக்கும் கொடுங்கோன்மை! - நீ
ஊமையாய் இருந்தால் எதற்காண்மை? - அதை
*** ஒழிக்க எழுந்தால் வரும்மேன்மை!
தீமையை விரட்டட்டும் உன்ஓட்டு! - புதுத்
*** திருப்பத்தைக் காட்டட்டும் உன்ஓட்டு!
கூர்மிக்க ஆயுதம் உன்ஓட்டு! - அதைக்
*** கூர்கெட்ட மனிதர்க்கு நீகாட்டு!
பணத்தால் ஜெயிக்கத் துடிக்கின்றார்! - ஆள்
*** பலத்தால் ஜெயிக்கத் துடிக்கின்றார்!
உனக்கா முறிக்கத் தெரியாது? - நீ
*** உடனே புறப்படு முடிவோடு!
* 'நீ மட்டும் வாழ்தல் அவசியமா?' என்று படிக்க வேண்டும் ..