33 உனக்கு மட்டும் காதலா
படிக்கும் போதே காதலா?
*** பழகும் போதே ஆவலா?
அடக்க உணர்வே இல்லையா?
*** அன்னை பயமே வல்லையா?
மீசை முளைக்கும் வயதிலே
*** மெள்ள முளைக்கும் காதலில்
ஆசை அதிகம் இருக்குமா? -
*** அறிவு அதிகம் இருக்குமா?
பருவம் தந்த கிளர்ச்சியைப்
*** பழுத்த காதல் என்பதா?
உருவம் தந்த கவர்ச்சியை
*** உயர்ந்த காதல் என்பதா?
இந்த வயதில் வருவது
*** இளமை ஈர்ப்புத் தானடா!
உண்மைக் காதல் வருவது
*** உலகம் புரியும் போதடா!
படிப்பில் கவனம் சிதறினால்
*** எடுக்கும் மதிப்பெண் குறையுமே!
எடுக்கும் மதிப்பெண் குறைவதால்
*** கிடைக்கும் வேலை நழுவுமே!
கிடைக்கும் வேலை நழுவினால்
*** நடத்தும் வாழ்க்கை நரகமே!
நடத்தும் நரக வாழ்க்கையால்
*** நடைப்பி ணம்தான் முடிவிலே!
காதல் வெற்றி பெற்றபின்
*** வாழ்க்கை தோல்வி யாவதா?
காதல் மட்டும் வாழ்க்கையா?
*** வாழ்க்கைக் காகக் காதலா?
பெற்றோர் ஆசி கிடைக்குமா?
*** பெரியோர் வாழ்த்துக் கிடைக்குமா?
உற்றார் நெஞ்சம் களிக்குமா?
*** உங்கள் மகிழ்ச்சி நிலைக்குமா?
ஆயி ரம்பேர் படிக்கையில்
*** உனக்கு மட்டும் காதலா?
போய்உன் வேலை பாரடா!
*** போட்டி போட்டுப் படியடா!