நியாயங்கள்

நியாயங்கள்
மத்தியானம் 3 மணி. நிர்மலா பெட்டியில் சாமான்களை எடுத்து திரும்பவும் வைத்து பின்னர் அதை இன்னொரு பெட்டியில் வைப்பதுமாக அல்லாடிக் கொண்டிருந்தாள் மொபைல் ஃபோன் அடித்தது. சனியன் இதுக்கு ஒரு நேரம் காலமே கிடையாது என்று அலுத்துக்கொண்டு ஃபோனைஎடுத்து “ ஹலோ என்று வேண்டா வெறுப்புடன் சொல்லவே
”மாமி நான் அபர்ணா பேசறேன். நான் செம்பூர் வந்துகொண்டே இருக்கேன், இன்னும் 30 நிமிடஙகளில் அங்கு வருவேன் ” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டாள்.
“இவள் எதுக்கு இப்பொ இஙகே வறா என் வாயை கிளப்பா விட்டால் அவளுக்கு தூக்கம் வராது “ என்று அலுத்துக்கொண்டாள் அரை மணிக்கூரில் அபர்ணா வந்து விட்டாள்
”என்ன மாமி அமெரிக்கா போறதுக்குள்ள ஏற்பாடெல்லாம் எது வரை வந்திருக்கு எத்தனை மாதம் அங்கு இருக்கப்போகிறீர்கள்? வருடா வருடம் நீஙகளும் போய் 9/10 மாதம் மஜா பண்ணீட்டு வருகிறீர்கள். பாவம் மாமா தான் இங்கு தனியாக இருந்து கொண்டு சாப்பாட்டுக்கு கஷ்டபடப் போகிறார். நீஙகள் அதைப்பற்றி கொஞசம் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை ” சிரித்துக்கொண்டே அபர்ணா சொல்லவும் ” ஏண்டி இதை சொல்லி என் வாயை கிளப்புவதற்கா கலியாணிலிருந்து வந்தாய் ” என்று பதில சொல்லிவிட்டு வந்த கோபத்தை சுதாரித்துக்கொண்டு “ வந்ததோ வந்தாய் இந்த சாமானங்களை எல்லாம் ஒழுஙகா இந்த இரண்டு பெட்டியிலும் வைத்து வெயிட் பாரு 23 கிலோவிற்குள் இருக்கிற மாதிரி பாக் பண்ணி வை. நான் கொஞசம் செம்பூர் மார்கெட் வரை போய்விட்டு வருகிறேன். மாமா வந்தா அவருக்கு உப்புமாவும் காபியும் பண்ணிக் கொடு “ என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள்.
15 நிமிடங்களில் மாமாவும் வந்தார். மாமாவிற்கு காபியும் உப்புமாவையும் கொடுத்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த்தாள். ”ஏன் மாமா, மாமி ஒரு காலத்திலே உஙக குரல் கேட்டாலே சப்த நாடியும் அடங்கி பேச்சுக் கூட வராமலிருந்தாள். இப்பொ மாமி சொன்னா ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் மௌன சாமியாரா அடங்கிப் பொய்விட்டீர்கள் எங்கெ போச்சு உஙக அதிகாரமும் கோபமும் “ என்று சிரித்துக் கொண்டே பேசிய அபர்ணாவை பாத்தார் சிதம்பரம்.
” அமாம் அபர்ணா ஒரு காலத்திலெ சிதம்பரமாக இருந்தேன் இப்பொ மதுரைக்கு அடங்கிவிட்டேன். உன் மாமி என்னை எங்கெ பேசவிடறா. அவளுக்கு அவள் பெண் தான் முக்கியம். லஷ்மி அமெரிக்கா போனதுக்கு அப்புறம் முதல்லெ கொஞச நாள் அமைதியாக இருந்தாள். பின்னர் லஷ்மிக்கு ஹெல்ப் பண்ணப் போகிறேன் என்று சொல்லி சொல்லி வருஷத்துக்கு 6 மாதம் அமெரிக்கா போக ஆரம்பித்தாள். அதற்கு அப்புறம் தான் அவள் போக்கே மாறி விட்டது. உனக்குத்தான் தெரியுமே லஷ்மியால் ஒரு துரும்பைக் கூட இந்தபக்கம் இருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடத் தெரியாது. அவ்வளவு செல்லம் கொடுத்து அவளை கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாள் அவளும் அம்மா அம்மா என்று நன்னா தாஜா பண்ணி அம்மாவை உபயோகபடுத் திக்கிறா. கோபம் வந்தா நாக்கிலெ நரம்பில்லாம பேசி திட்டவும் தயஙகமாட்டாள். ஆனாலும் சொரணை கெட்டு அமெரிக்கா போய் குப்பை கொட்டுகிறாள் உன் மாமி. இப்பொ லஷ்மி உங்க மாமிக்கு க்ரீன் கார்ட் வேறெ வாங்கி கொடுத்துவிட்டாள். இப்பொ அவள் டாலர் மாமி தலை கால் தெரியாமல் குதிக்கிறாள் ”. என்று சொல்லிமுடித்தார்.
அதற்குள் நிர்மலா வரவும் “ என்ன அபர்ணா உஙக மாமா என்ன சொன்னார் என்று நான் கேட்கப்போவதில்லை. எனக்கு தான் தெரியுமே அவர் என்ன சொல்லியிருப்பர் என் தலையை உருட்டாவிட்டால் அவருக்கு பொழுதே போகாது ” என்று சொல்லிவிட்டு . ” சரி எல்லாவற்றையும் ஒழுங்கா பாக் பண்ணிவிட்டாயா. இதோ இந்த சில்லறை சாமானையும் அந்த பெட்டியில் வை. இஙகேயே இரண்டு நாள் இருந்து என்னை ஏர்பொர்ட்டில் கொண்டு விட்டுவிட்டு கலியாணிற்கு போகலாம் “. என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
” அபர்ணா என் கூட வா ஒரு வாக் போய்விட்டுவரலாம் “ என்று மாமா சொல்லவே அவருடன் கிளம்பினேன். மாமா ஏதோ என்னிடம் சொல்ல வருகிறார் என்று ஊகித்துக் கொண்டேன். நானும் மாமாவும் செம்பூர் கால்ஃப் கிளப் போகும் வழியிலுள்ள ஒரு சின்ன கார்டனில் போய் அமர்ந்துகொண்டோம். மாமா தான் ஆரம்பித்தார். ” அபர்ணா ரமேஷை பார்த்தியா அவன் என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவது இல்லை. ஒரு ஃபோன் கூட பண்ணுவதில்லை, நான் போன் பண்ணினாலும் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசுவதில்லை மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ” என்று சொன்னதும்
“ மாமா ரமேஷ் உஙக பிள்ளை நீஙக அருமையா வளர்த்த பிள்ளை. உஙக மாதிரி முன்கோபம் இருந்தாலும் நன்றாக பாசமாகத் தான் இருந்தான். அவனுடைய கலியாணம் ஆகி, மாலதி மன்னி வந்ததற்கு அப்புறமும் நன்றாக தான் இருந்தான். அவன் மனசு வெறுத்து மாறியதற்கு காரணம மாமியும் லஷ்மியும் ஒரு விதத்தில் நீங்களும் தான். மாலதி மன்னியைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். கொஞசம் ரிஸர்வுடு டைப். அப்பா இல்லாதபெண். அவ அம்மா கஷ்டப்பட்டு அவளை வளர்த்து படிக்க வைத்தார்கள். அவளும் முதலில் பாசமாகத் தான் இருந்தாள். ரமேஷுக்கு கலியாணம் ஆன 5/6 மாதங்களில் லஷ்மி அவளை ஒரு மன்னியாக பார்க்காமல், ஒரு விரோதியாக பார்க்கத் துடங்கி விட்டாள். மாமியிடம் அவளை பற்றி இல்லாததெல்லாம் சொல்லி மாமியை வெறுப்பேற்றி தனக்கு சப்போர்ட்டாக வைத்துக்கொண்டாள். மாமியும் தன் பெண் தான் நல்லவள் வரப்பட்ட மாட்டுப்பெண் கெட்டவள் தன் பிள்ளையை மாற்றிவிட்டாள் என்று ஒரு பொய்யான எண்ணத்துடன் வெறுக்க ஆரம்பித்தாள். மாமா நீங்ககளாவது அந்த சமயத்தில் ரமேஷுக்கும் மாலதிக்கும் சப்போர்ட்டாக இருந்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு லஷ்மியின் பேச்சையும் மாமியின் பேச்சையும் கேட்டுக்கொண்டு ரமேஷையும் மாலதியையும் சப்போர்ட் பண்ணாமல், இருந்தேள். இதை எதிர்பார்க்காத ரமெஷ் மாலதியை அழைத்துக்கொண்டு வெளியூர் போய்விட்டான். அதைப்பற்றி கொஞசம் கூட கவலைப்படாத மாமியும் ”விட்டுது பீடை” என்ற நினைப்புடன் இருக்க ஆரம்பித்தாள். வரப்பட்ட மாட்டுப்பெண் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தன் பெண் மட்டும் நன்றாக சௌக்கியமாக பிக்கு பிடுங்கல் இல்லாமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லஷ்மியை கண்மூடித்தனமான பாசத்துடன் வளர்த்தாள். இப்பொ நீஙகள் ரமெஷையும் மாலதியையும் குற்றம் சொல்வதில் ஒரு நியாயம் இல்லை. நீங்களும் மாமியும் ஜாதகம் பார்த்துத்தான் கலியாணம் பண்ணிவைத்தீர்கள். கலியாணம் கழிந்தவுடன் ரமேஷ் பழைய மாதிரி இல்லை மாறிவிட்டான் என்று மாமி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மாலதி ரமேஷை நம்பி நம்ம குடும்பத்திற்குள் வந்த பெண். அவளை நாம் தான் அனுசரித்து அரவணைத்துக்கொண்டு போகவேண்டுமே தவிர, அவள் ரமேஷை மாற்றி விட்டாள் என்று சொல்வதில் நியாயம் இல்லை. இப்பொதைக்கு இதைப் பற்றி பேசுவதில் ஒரு லாபமும் இல்லை நடப்பது போல் நடக்கட்டும் என்று அமைதியாக இருங்கள் அவ்வளவு தான் நான் சொல்லுவேன் சரி நாம போவோம் இல்லைன்னா மாமி லோ லோ என்று கத்த ஆரம்பிப்பா “ என்று சொல்லிவிட்டு இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில் நிர்மலாவும் அமெரிக்காவிற்கு புறப்பட்டு போனாள் .எப்போதும் போல் எடுப்புச் சாப்பாட்டில் தனியாக நாட்களை கழித்தார் சிதம்பரம். மூன்று மாதங்களே ஆகியியிருக்கும். ஒரு நாள் காலை நிர்மலாவிடம் இருந்து ஃபோன் கால் வந்த்து. அன்று இரவு ஸ்கைப்பில் பேசவேண்டும் என்று சொல்லவே சிதம்பரம் ஸ்கைப் காலிற்காக டெஸ்க்டாப்பை ஆண் செய்துவிட்டு காத்திருந்தார். நிர்மலா ஸ்கைப்பில் அழ ஆரம்பித்துவிட்டள் கண்கள் எல்லாம் சிவந்து இருந்த்து. இப்பொ என்ன ஆகிவிட்டது இப்படி ஒப்பாரி வைக்கிறாய். இந்த மாதிரி நிர்மலா அழுது பார்க்காத சிதம்பரம் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். சுதாரித்துக் கொண்டு சரி சொல்லறதை ஒப்பாரி வைக்காமல் சொல்லு “ என்று சொல்லவே
” நான் அடுத்தவாரம் திங்கள் கிழமை காலையில் வரும் ஃப்ளைட்டில் மும்பை வருகிறேன். இனிமேல் இந்த நரகத்திற்கு (அமெரிக்காவிற்கு) வரவே மாட்டேன் லஷ்மி அவ சுயரூபத்தை காட்டிவிட்டாள். மாப்பிள்ளையும் லஷ்மிக்கு சப்போர்ட்டா என்னை என்னவெல்லாமொ சொல்ல ஆரம்பித்துவிட்டார் இனிமெல் அவாளுக்கு என் தயவு அவசியம் இல்லை. விஹானும், ரின்னாவும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களும் என் பேச்சை மதிப்பதில்லை. இவ்வளவு நாள் என் பெண் என் பெண் என்று இறுமாப்புடன் தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தேன் . இப்போது தான் புரிந்தது. அவள் என் பெண்ணே இல்லை நான் நேரில் வந்து எல்லாம் சொல்லுகிறேன் ” என்று தன்னுடைய ஒப்பாரியை முடித்தாள்..
சிதமபரத்திற்கோ ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதாவது நிர்மலாவிற்கு புத்தி வந்தது என்று. இன்னொரு பக்கம் ரமேஷையும் மாலதியையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லை. சரி நடப்பது நடக்கட்டும் என்று நிர்மலாவின் வரவுக்காக காத்திருந்தார். அதற்கிடையில் அபர்ணா ஒரு நாள் வந்திருந்தாள். அவளிடம் நிர்மலா மும்பைக்கு திரும்பிவரும் செய்தியை கூறினார். அபர்ணாவும் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு ” மாமா ரமேஷும் மாலதியும் குழந்தைகளும் ஆஸ்த்ரேலியா போகப்போகிறார்கள். நெற்றைக்குத்தான் ஃபோன் வந்தது. உஙளுக்கு இரண்டு நாளில் ஃபோன் செய்வதாக சொன்னான் “ என்ற செய்தியை சொன்னது சிதமபரத்தின் முகம் என்னவோ போல் ஆகிவிட்டது.
அடுத்தவாரமே நிர்மலா மும்பை வந்து சேர்ந்தாள். அவள் முகம் பேயறைந்தது போல் இருந்த்து. முதல் இரண்டு நாட்களுக்கு சிதம்பரம் ஒன்றுமே சொல்லவில்லை. அடுத்த வாரம் அபர்ணாவும் இருந்த சமயத்தில் ” நிர்மலா, நடந்ததையெல்லாம் போட்டு திரும்ப திரும்ப நினைத்து மனதை கஷ்டபடுத்திக் கொள்ளாதெ. என்ன இருந்தாலும் லஷ்மி நம்முடைய பெண். நீ தான் பெண் பெண் என்று அளவுக்கு மீறி பாசத்தை வைத்துவிட்டு, இப்ப அவள் என் பெண்ணே இல்லை என்று சொல்லுவதில் ஒரு பலனும் இல்லை. இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். ரமேஷும் மாலதியும் குழந்தைகளும் ஆஸ்த்ரேலியாவில் செட்டில் பண்ணப் போகிறார்கள் “ என்று சொன்னவுடன் “ போகட்டும், எஙகே வேண்டுமானாலும் போகட்டும். நான் ஒருத்தர் வீட்டிலும் கை நனைக்கப் போவதில்லை. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீர்களா நாம் மும்பையை வீட்டை விற்றுவிட்டு கோயம்பத்தூரிலுள்ள ஸீனியர் சிடிஜன் ஹோமிற்கு போயிருப்போம். இப்போதைக்கு இது தான் என்னுடைய முடிவு என்னுடைய பிடிவாதத்தை / வீம்பை என்னால் விடமுடியாது. கொஞ்ச நாள் அங்கேயாவது போய் நிம்மதியாக இருப்போம் என்றைக்காவது ஒரு நாள் நான் மனம் திருந்துவேன் என்கிற நமிக்கை இருக்கு அப்பொ பார்த்துக்கொள்ளலாம்” என்று அழுதுகொண்டே சிதம்பரத்தை பார்த்தாள். சிதம்பரமும் “சரி உன் இஷ்டம் போல செய்யலாம்” என்று சொல்லிவிட்டு கோவை சீனியர் சிடிஜன் ஹோமைப்பற்றிய தகவல்களை அறிய ப்ரோக்கரை பார்க்க கிளம்பினார்
(செம்பூர் நீலு) நீலகண்டன்