thaai
அம்மா..... அம்மா...
பட்டினியாய் நீ இருந்து பால் சோறு எனக்களித்தாய்...
எத்தனை நாள் தவமிருந்து எனையிங்கு வாழவைத்தாய்...!
அத்தனைக்கும் கைமாறாய் அப்படி நான் என் செய்தேன்
மெத்தனமாய் இருந்து உன்னை மேலுலகிற்கு அனுப்பிவிட்டேன்....!!
தலை சாயத் தோல் தந்து தலை தூக்கி விட்டவளே...
தலை தாங்க மகனின்றி, தலை தொங்கி போனாயோ.....?!
மடிதாங்கி உயிர் போனால் பொறுத்திருப்பேன் தாயே......, நான்
படிதாண்டி போனபின்னே....., போய்விட்டாயே....!!
சோறு ஊட்டிய கரம் அதையும்...., தலை கோதிய விரலினையும்.....,
தாலாட்டிய மடியினையும்...., ஒளியூட்டிய விழியினையும்.......,
உரமூட்டிய நெஞ்சினையும்....., சுமை தாங்கிய தோள்களையும்.....,
தீ மூட்டியே நான் எரித்தேன்; எப்படித்தான் பொறுத்தாயோ ?
என் இறைவா....! இச்சோகம் ஏன் இறைவா...!!
என் துயரில்.... நீ பெற்றாய்.... தன்னிறைவா...!!!
உனக்கு ஒவ்வா விஷயம் தான்.... என் உயர்வா...!!!!
"தாய்" கணக்கை ....சரிபார்க்கும் சமயத்தில் கண்ணயர்வா...?!
இற்றுவிட்ட சொந்தங்கள் எத்தனையோ தானிருக்க
"பற்று " வைத்த தாய் அவளை "வரவு" வைத்த வகை என்ன...?
விட்டுவிடு சிலகாலம் என்றேங்கி கேட்டவளை...
விட்டுவிடா தெடுத்து வர உனக்களித்த தொகையென்ன..?!
குறைந்த வழதில்லை.... நீ..... கொண்டு சென்றாய் குற்றமில்லை.....
நிறைந்த வாழ்வில் நான் நிம்மதியை தரவில்லை....
குறைபட்டு போனதனால் குமுறுகிறேன் வேறில்லை....
"இறை" போட்ட கணக்கினைதான் எதிர்ப்பவர் யாருமில்லை.....
இறவாமை கேட்கவில்லை என் இறைவா......!!
"இறைமை" எனை நீங்கியதே ...ஏன்? இறைவா ....?!!