உழவர் திருநாள்
உழவர் திருநாள்
“உண்டிக்கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்” என்ற பொன்மொழிக்கு இணங்க மனிதன் உயிர் வாழத் தேவைகளாகிய உண்டி, உறையுள், உறைவிடம் ஆகிய மூன்றனுள் உண்டி என்னும் உணவினை நல்கும் பெருமை உழவர் திருமகன்களையே சாரும்.
அவர்கள் “சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க இயலும்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கருமமே கண்ணாகக் கொண்டு, காற்றுள்ள போதே தூற்றியும், வான்மழையை எதிர்நோக்கி பருவத்தே பயிரிட்டும், உரிய பருவத்தில் அறுவடை மேற்கொண்டும், மக்கள் சேவையே மகேசன் சேவையெனக் கருதி, ஆருயிர்களின் அரும்பசியினைப் போக்கி இன்புறுபவர்களே உழவர் பெருமக்கள்.
அவர்தம் அரும்பணிக்கு அன்புக் காணிக்கை நல்கிட, அவர்களைப் பெருமைப் படுத்தி சிறப்பிக்க ஏற்பட்ட நன்னாளே, பொன்னாளாம் உழவர் திருநாள்.
அம்மட்டுமா? உழவர்களுடன் காளைகளும் அன்றோ அயராது உழைக்கின்றன. உழவில் மட்டுமா?
“ஜல் ஜல் ஜல் என சலங்கைக் கட்டி சல சல சல என்ற சாலையில்” உல்லாசமாய் நாம் பவனிவர வண்டியுடன் நம்மையும் சேர்ந்தேயன்றோ சுமக்கின்றன.
அத்தகைய காளைகளையும் சிறப்பிக்க உதித்ததன்றோ ‘மாட்டுப் பொங்கல்’.
“தாயினும் சாலப்பரிந்து காக்கும் ஈசனைப் போல்” தன் உதிரத்தையே பாலாய் நல்கி நம்மை வாழ வைக்கும் கோமாதா, காமதேனு, அம்மா, லக்ஷ்மி என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்படும் பசுவிற்கும் சேர்ந்தேயன்றோ மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகின்றது.
வாரம் முழுவதும் அயராது பணியாற்றும் மனிதர்களுக்குக் கூட வாரத்தின் ஒரு நாளில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. ஆனால் அயராது பணியாற்றும் காளை மற்றும் பசுவிற்கு, வருடத்தில் ஒருநாள் சிறப்பு. ஆயினும் அன்றும் கூட அவை உழைக்கத்தான் செய்கின்றன. அதன் மூலம் உழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி,
“ நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்”
“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்று,
வாய்மொழொயாக மட்டுமே பாடித்திரியும் மாந்தர்களை விழிப்புணர்வுடன் உழைக்க அழைக்கின்றன. என்னே அவற்றின் பெருமை! அதோடு,
“உழைத்துவாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்ற பொன்வரிகளையும் அன்றோ நமக்கு வலியுறுத்துகின்றன.
அம்மட்டுமா? வீரத் திருமகனின் வீரத்தினைப் பறைசாற்ற, ஏற்பட்ட மஞ்சு விரட்டிலும் மனிதனோடு மோதி, அவனை உற்சாகப்படுத்தியும், இறுதியில் தோற்றதைப்போல் பாவனை நல்கி அவனுக்கு வெற்றிவாகை சூடவும் உதவுவதும் காளைகளே!
இதனால் கூட ஆடவர்க்கு “காளையர்” என்ற புனைப்பெயரும் ஏற்பட்டிருக்கலாம்.
வாருங்கள்! அனைவரும் உழவர்த் திருநாளைப் போற்றுவோம்! கொண்டாடுவோம்! மகிழோம்! மகிழ்விப்போம்.
அன்புடன்,
திருமதி ஸ்ரீ.விஜயலக்ஷ்மி