நாணத்திலோர் நங்கை

நாணத்திலோர் – நங்கை
ஆளான பெண்ணொருத்தி
அங்கமெலாம் இதழுடுத்தி
இதயத்தை கிழித்துவிட்டு
இறுமாப்பாய் சிரிக்கின்றாள்..!
முழுமதியாய் ஆனவளோ
முக்காடை அவிழ்த்தபடி
முகம்காட்டி நிற்கின்றாள்
முறைமாமன் வருவானென ..!
தளிர்மேனி தாவணியாம்
தாவரத்தின் பசுமையிலே
தரித்தா லொருதேவதையாய்
தாய்பெற்ற பிள்ளையை்போல்..!
வழிமேலே விழிவைத்தாள்
வாடதொரு கனவுலகில்
வஞ்சியவன் வாளெடுத்து
வருவானென யோசனையில்..!
தேனெடுக்கும் பருவத்தில்
திகட்டாத பேரழகில்
தீர்க்கமுடியா ஆசைகளை
தேகத்தில் சுமந்தவளாய் ..!
ஆயுளது முடியுமுன்னே
ஆடைகளை அவிழ்த்தபடி
நாணமுற சிவக்கின்றாள்
நல்லநேரம் பார்த்தபடி...!