என் உதிரப்பூ
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பாலே உருவாகி
எனக்குள்ளே கருவாகி
உடலோடும் உயிரோடும்
ஒன்றியவளே......
உன்னை உயிா்கொண்டு அணைத்து - என்
மூச்சாலே முத்தமிடுகிறென்...
மலடிப்பட்டம் அகற்றி
தாய்மையை பாிசளித்த
என் முத்துப் பெட்டகமே..
புரண்டு படுத்தால் என் பிள்ளை நோகுமோ...
படியெறினால் என் பிஞ்சுக்கு வலிக்குமோ - என
கணப்பொழுதும் உன்னையே
எண்ணி தவிக்கின்றேனே..
ஓருடல் ஈருயிராய்
வாழச்செய்தவளே....
உனக்கெனவே உண்டு பருகி
உறக்கமிழந்த இரவுகளோடு
உந்தன் மெல்லிய அசைவுகளை ரசித்து
நீ உதைக்கும் இடம் தொட்டு வருடி மகிழ்கிறேன்-
உன் வருகையை எண்ணி....
என்பிள்ளை நாளை வருவாள்....
மடிமேல் விளையாடி
மார்பில் துயில்கொள்ள
அாிசிப்பல் காட்டி சிாித்து
அம்மா வென்றழைத்து
கணப்பொழுதில் திழைக்க செய்வாள்
மகிழ்ச்சி பெருங்கடலிலே....
சினம் கொள்ளும் தந்தையை
சிறு புன்னகையாலே தோற்கடிப்பாள்....
முரட்டு தோற்றம் கொண்ட தாத்தாவின்
தாடியை பிடித்து விளையாட வருவாள்....
மழலை மொழியாலே - என்
கோபக்கார கணவனையும் குழந்தையாக்குவாள்...
எண்ணமெல்லாம்
பலவண்ணக்கனவுகளோடு
எதிா்நோக்கிக் காத்திருக்கிறேன்
என் உதிரப்பூவே உன் வருகைக்காக....
மறுபிறவியாம்
பிரசவ வேதனையென்று
யாா் யாரோ சொன்னார்கள்
இடியாய், மின்னலாய்-
வேதனைகளை தாண்டி,
வல்ல நாயன் துணைகொண்டு
நட்சத்திரமாம் உன்னைப்
பெற்றெடுப்பேன் என் பொக்கிஷமே.....
இரு கரங்களில் ஏந்தி
நெஞ்சோடு அணைக்கையிலே
பட்டதெல்லாம் மறந்திடுவேன்
உன் பூ முகம் காண்கையிலே........
“என் உதிரப்பூ“ என்ற தலைப்பை சகோதரர் அஹமது அலி அவா்கள் வழங்க நான் முயற்சித்தது இக்கவிதை..... அன்பு சகோதரருக்கு நன்றிகள் பல....