நன்றி சொல்வேன் கண்ணவர்க்கு
இன்பக்கடல் தேடலடா
நானும் ஆனேன் அன்னையடா!
நன்றி சொல்வேன் கண்ணுறங்கு!
கண்ணிற் காணுங் கடவுளடா!
கண்ணவர் கொடுத்தார் கண்ணுறங்கு!
பெண்ணாய் நானும் பிறந்தனடா!
புண்ணியம் ஆனேன் கண்ணுறங்கு.,
உன்னை நானும் பெற்றேனடா!
பெண்ணின் பெருமை கண்ணுறங்கு.
செல்வம் எல்லாம் நீதானடா!
சீரே புகழேக் கண்ணுறங்கு.
பிறவியில் என்ன வேண்டுமடா!
மடியில் நிறைந்தாய் கண்ணுறங்கு!
இன்பக் கடலின் தேடலடா !
பொன்னே மணியே கண்ணுறங்கு.
அன்பின் கொடையே இன்பமடா!
அம்மா மொழியே கண்ணுறங்கு!
எங்கள் குலத்தின் வம்சமடா!
தங்கத் தளிரே கண்ணுறங்கு!
சங்கத் தமிழே சிங்கமடா!
பொங்கும் புனலே கண்ணுறங்கு!
உன்னை நிறைக்கும் கல்வியடா!
பண்மைத் திறமே கண்ணுறங்கு!
பின்னை நினைவாய் நன்றியடா!
அன்பின் நிழலே கண்ணுறங்கு!
பேதம் இல்லா உலகமடா!
நாதம் நீயேக் கண்ணுறங்கு.
பாவம் இல்லா பழக்கமடா!
வேதம் சொல்லே கண்ணுறங்கு!
அமைதி வழியின் விளக்கமடா!
அண்ணல் நீயேக் கண்ணுறங்கு.
இமையே இமயக் காவலடா!
இந்தியத் தமிழே கண்ணுறங்கு!
உலகின் உறவே உண்மையடா!
பழகும் மொழியே கண்ணுறங்கு!
விலகும் இருளின் விடியலடா!
வளரும் நிலவே கண்ணுறங்கு!
கொ.பெ.பி.அய்யா.