தேவன் செய்த வீணை

(திருநங்கை பற்றிய கவிதை)

பூவினத்திற்கும்
வண்டினத்திற்கும்
இடையில்
இது எந்த பாலினம்?

இறைவன் செய்த
மூனறாவது களிமண் பொம்மை
இது என்ன
தேவன் விளையாட்டு?

சமூகக் காடுகளில்
தடாகங்களே துரத்திய
இந்த தாக மான்
தன்னைத்தானே
சுய விசாரணை செய்கிறது

மூன்று கால நதிகளின்
சங்கமத்தில்
ஆண்டவனின் செல்ல குழந்தை
அலைகளை விம்முகிறது

வாழ்க்கை கச்சேரியில்
கேலிப் பார்வைகள்
வாசமிலா பூமனதில்
சோகப் போர்வைகள்

பாவம்
பருவராகம் பாடத் தெரியாத
பரிதாப வீணை
கண்ணீரை யல்லாமல்
வேறேது மீட்டும்?

அதன் சோக மீட்டலில்
பூமரத்தின் இலைச் சருகுகளாய்
ஊமை ஸ்வரங்கள
உடைந்து விழுகின்றன (1994)

( எமது "தரையில் இறங்கும் தேவதைகள் " நூலிலிருந்து ) ( எழுத்தில் மறுப்பதிவு )

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-Jan-15, 6:41 pm)
பார்வை : 164

மேலே