காதலைத்தூவி வாழ்த்துகிறேன்
இன்பத்தை எண்ணையாக்கி
இதயத்தை திரியாக்கி
மனதிற்குள் தீபமொன்று
மன்னவனே ஏற்றிவைத்தேன்....
இளையவளின் திருமணமாம்
வீசியது புயல்காற்று
அண்ணிக்கூட தயார்தானாம்
ஆரம்பித்தது அடுத்தக் கூத்து....
ஏதேதோ உளறிக்கொட்டி
என் மணத்தை தள்ளிவைத்தேன்
வாய்த்திட்ட சந்தர்ப்பங்களில் - என்
மனத்தை உனக்கும் சொல்லி வைத்தேன்....
கடமை என்றாய்
கால அவகாசம் கேட்டாய்
கடைசிவரையில் துணிநீ என்றாய்....
சிங்கம்போல செருக்கிருந்தாலும் - ஏனோ
உன் அன்புச் சாட்டைக்கு
அடிமைப்போல் ஆடினேன் நானும்....
காதல் செய்த காரணத்தினால் - உனை
கண்காணிக்கத் தோன்றவில்லை
வருடம் மூன்று கடந்த பின்னும் - நம்
திருமணப்பேச்சை எடுக்கவில்லை....
எல்லாமிருந்தும் என்னப்பயன்...?
எனை மொய்யெழுத வக்கற்ற
ஏழையாக்கிவிட்டது - உன்
திருமண அழைப்பிதழ்....
சபித்துவிடக் கூட மனமில்லை - என்
சஞ்சலம் உனக்கு புரியப்போவதுமில்லை
உன்மீதான என் காதலைத்தூவி
உளமார வாழ்த்துகிறேன்... நீ வாழ்க... நலமாக....