காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 24

நாளை
பள்ளியில் ஓவியப்போட்டியாம்..
சிறுவனிவ‌ன்
வெள்ளைத்தாளும் எழுதுகோலும் எடுத்து
சிந்தித்தபடி அமர்ந்துவிட்டான்..

வாசலில்
அம்மா போட்டிருக்கும்
கோலத்தை வரையலாமா...!

வானத்தில்
இறைவன் போட்டிருக்கும்
வானவில்லை வரையலாமா.....!

தோட்டத்தில்
மலர்ந்து சிரித்திருக்கும்
ரோஜாவை வரையலாமா...!

என்று சிந்தனை
தொடர்ந்த வேளையில்
ஒரு சிறு குருவி
வாயில் ஒரு இறகுடன் வந்து
சிறுவனிடம் முறையிட்டது...

சிறகடித்து பறந்து வந்தோம்..
நீங்கள் முதலில்
வேடனின் உருவில் வந்து
எங்களை அழிக்கத் தொடங்கினீர்கள்....

பின்
எமனது வேடத்தை ஏற்றுக்கொண்டீர்கள்..
மரத்தை அழித்து
காட்டை அழித்து
இன்று அலைவரிசைகளின் ஆக்ரமிப்பால்
எங்கள் தலையெழுத்தையே மாற்றிவிட்டீர்கள்....

உங்கள் வசிப்பிடங்களை விரிவுபடுத்த‌
எங்கள் வசிப்பிடங்களை அழித்துவிட்டீர்...

உங்கள் சாலையின் அகலத்தை அகலப்படுத்தி
எங்கள் சாலையோர சந்தோஷத்தை
சத்தம் இல்லாமல் சலவை செய்துவிட்டீர்...

எல்லா முன்னேற்றமும்
உங்களுக்கு மட்டும்...
நாங்கள் எங்கு செல்வது.....?

அழிவிலும் நீங்கள் எங்களை
முன்னேற முயற்சிக்கிறீர்களோ....
என்ற படி.....

இறகினை என்னிடம் விட்டுவிட்டு
கண்ணீருடன் கூடுகட்ட இடம் தேடி
பறந்து சென்றது....

நாளை
குருவிக்கும் பசுமைக்கும்
பிராயச்சித்தம் பண்ணும் படியாக‌

அழகிய சிறு கானகமும்
அதில் ஒரு சிறு மரமும்
அதில் ஒரு குருவிக்கூடும்
அம்மா குருவியும் குட்டிக்குருவியுமாக‌
ஒரு ஓவியம் தீட்ட முடிவெடுத்தான்...

இறகு
தென்றலில் தன் சிறகினை விரித்து
மென்மையாய் எனக்கு நன்றி சொன்னது....

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Jan-15, 9:32 pm)
பார்வை : 187

மேலே