தூரிகைக் கால்கள் -ரகு
எப்படிக் கவர்வதெனத்
தெரியாமல்
தவங்கிடக்கின்றன
மைதானங்கள்
மேலும் பல
புதிய விளையாட்டுத்
தூரிகளை
இணைத்துக்கொண்டு
தூரிகைக் கால்கள்
துள்ளிவிளையாட
வெள்ளைத்தாளாய்
விரிந்து கிடக்கிறது
வீட்டருகே மைதானமொன்று
சறுக்கி விளையாடவும்
ஏறி குதிக்கவும்
சிலபலவற்றைத்
துருப்பிடிக்காமல்
தளிர்களுக்கு
ஈட்டுவதெனவும்
இயற்கையோடு
போராடுகிறது
மற்றுமொரு மைதானம்
புள்ளி கோலமாவதையும்
புகைவண்டியைப் பொம்மை
இயக்குவதையும்
விழிவலிக்க வண்டிகளோடு
விரையும் வித்தையையும்
முறையேக் காட்டியக்
கணினிக்குள் கட்டுண்டன
குழந்தைகளின் மொத்தம்
ஒவ்வொரு நாளின்
விடியலின் அழகையும்
அந்தியின் அற்புதத்தையும்
வெறிச்சோடியேக் கடக்கின்றன
மைதானங்கள்
ஒரு வெள்ளகாலத்தின்
இடுப்பளவுத் தண்ணீரில்
தத்தளித்து வந்தவொருக்
குழந்தையை
மைதானத்தின் மரமொன்று
கிளையில் ஏந்தியபோது
சிலிர்த்துக் கொண்டது
மூழ்கிய மைதானம்