மனித இயந்திரமா பெண் -அர்ச்சனா ராம்
இயல்பான காதலை
இன்முகத்தோடு
தேடிய
இளம் பெண்களை
கவுரக் கொலை
செய்யும்
குடும்பத்தார்களை
படித்திருக்கிறேன்.
ஆனால்
முந்தாநாள்
மூன்று பிள்ளை பெறு என்றும்
நேற்று
முப்பது பிள்ளை பெறு
என்றும்
பெண்ணின்
தாய்மையை கவுரக்கொலை
செய்த-மதி
கெட்ட சாமியார்களை
இன்று நான்
கண்டதிர்ந்தேன்.
ஓர் பெண்ணின்
உடல் என்ன
ஆண் இச்சை
தீர்க்கும்
எச்சில் பண்டமா?
மீண்டும் மீண்டும்
மனித உடல்
தயாரிக்கும்
வெறும்
இயந்திரச்
சதைப் பிண்டமா?
இனி என்
தந்தை தந்த
பெயர் தவிர்த்து
என்னைப் பெண்ணாய்
மட்டும் பார்க்கும்
வேறு பெயர் வேண்டாம்.
என் உடலை
மதிப்பிட்டு என்னைக்
கன்னி என்பீர்கள்
இனி அவ்வாறழைக்க
வேண்டாம்.
வாரிசுகளை
உருவாக்கித் தருவதால்
ஹோம் மேக்கர் என்பீர்கள்
இனி அவ்வாறழைக்க
வேண்டாம்.
தன் குடும்பம்
பசிபோக்க
துடிப்பவளின் உடலை
வலைவீசி
பிடித்தபின்
விலைமகள் என்பீர்கள்
இனி அவ்வாறழைக்க
வேண்டாம்.
ஒருவேளை கணவன்
இறந்து விட்டால்
பெண் உடலில் உள்ள
பொட்டழித்து,பூவழித்து
விதவை என்பீர்கள்
இனி அவ்வாறழைக்க
வேண்டாம்.
வெறும் உடல் சார்ந்து
பெண்ணுடலுக்கு
மாறி மாறி
நீங்கள் வைக்கும்
பெயரால்
என் மனம் நோகுதே
பெண்ணாய் பிறந்ததை
எண்ணி
தினம் வேகுதே!
இதை விடுத்து
இனி
புலவனுக்கு
பெண்பால் பெயர்
என்ன?
கலைஞனுக்கு
பெண்பால் பெயர்
என்ன?
அறிஞனுக்கு
பெண்பால் பெயர்
என்ன?
நம்மைப் படைத்த
இறைவனுக்கு
பெண்பால் பெயர்
என்ன?,
என சிந்தியுங்கள்,
நல்லசொல் தேடி
தமிழை நிந்தியுங்கள்!
இனியொரு முறை
பெண்ணுடலை
நுகர்வுப் பண்டமாக்கும
கேடு கெட்ட
பன்னாட்டு கம்பெனிகளின்
பாழாய்ப் போன
கலாசாரத்தினால்,
மதத் தீவிரவாதிகளை
உருவாக்கும்
கரு சுமக்கச் சொன்னால்
கன்றும் ஈனாது
கலமும் சிந்தாது
கன்னி என் இளமை
காற்றோடு போனாலும்
கல்யாண நுகத்தடியில்
மாட்டாத பெண்ணாகவே
காலம் முழுவதும்
இருந்து விடுகிறேன,
இல்லையென்றால்
இந்தக் கேடுகெட்ட
நுகர்வு கலாச்சாரத்திற்கு
இரையாகாமல்
நரை கூடி
மரிக்கவே விரும்புகிறேன்!