வட்டங்கள்
வட்டங்களுக்குள்
வாழ்ந்து பழகிவிட்டோம் !
ஜாதி மத இன மொழியென்று
வெவ்வேறு வட்டங்கள் !
வட்டங்களிலிருந்து
தம்பட்டம் அடிக்கின்றோம் !
அகங்கார பட்டங்கள் விடுகின்றோம் !
அடுத்தவன் விட்ட பட்டதை
மாஞ்சா போட்டு அறுக்க பார்க்கிறோம் !
கஷ்டப்பட்டாலும்
நஷ்டப்பட்டாலும் - வட்டங்களை விட
இஷ்டப் படுவதில்லை !
வட்டங்களின் விட்டத்தை நீட்டிக்க
அடுத்தவன் வட்டத்தை முட்டிப் பார்ப்போம் !
மனங்களைக் கூட வட்டமாக்கி ஒளிந்து கொள்வோம் !
அன்பைக் கூட வட்டமிட்டு வளைக்கப் பார்ப்போம் !
சட்டங்கள் என்ற வட்டங்களை மட்டும்
எப்பாடுபட்டேனும் உடைக்கப் பார்ப்போம் !
பரிதியை வட்டமிடும் பூமியில் பிறந்ததால்தானோ
அரிதான வாழ்வினையும் வட்டங்களில் திணிக்கின்றோம் ?
சூரிய மண்டலத்தையும் தாண்டி பிரபஞ்சம் விரிவடையும் !
தெரிந்தும்கூட நாமெல்லாம் வட்டங்களுக்குள் உழல்கிறோம் !
பட்டுப்போன மரங்களே !
உங்களின் நாளையத் தளிர்களையாவது
வட்டப் பாத்தியில் அடைக்க பார்க்காதீர் !
வானளாவ அவை விருட்சங்களாய் வளர்ந்து
பிரபஞ்சமெங்கும் படரட்டும்-
அந்த விருட்சங்களின் எண்ணப் பறவைகள்
எதையும் வட்டமிட்டு பறக்காமல்
சுதந்திரமாய் உலவட்டும் !