தங்கத் தண்டு ----பாகம் 15----------- மர்மத் தொடர்
சுதர்சனாவின் குறுஞ்செய்தியை நாற்பது நிமிடம் கழித்துப் பார்த்தான் அந்தரீஸ். ஐயையோ! அவள் விரல் ரேகையை ரெஜிஸ்டர் பண்ணவில்லையே! அதைப் பற்றி பேசினதே இல்லையே! சுதர்சனா நாத்திகை ஆயிற்றே! தேவியின் பாதங்களில் கை பதிக்க மாட்டாளே!
உடனே ஃபோன் செய்தான்! எடுக்கப்படவில்லை! விபரீதம் நிகழ்ந்து விட்டதா? சுதர்சனாவின் குறுஞ்சிரிப்பும், புத்திசாலித்தனமும்... தாயே விஷ்ணு துர்க்கா! சுதர்சனாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாது! என்னால் தாங்க முடியாது! உனக்கு விரதமிருந்து முடி காணிக்கை செலுத்துகிறேன்..
டிரைவருக்காக காத்திராமல் தானே வண்டியோட்டி வந்தான். வேகவேகமாக வீட்டுக்குள் நுழைகிறான்... பூஜையறையில் சுதர்சனா விழுந்து கிடக்கிறாள்... ஓடிப் போய் சுதர்சனாவை மடியில் போட்டுக் கொண்ட போது உடல் அப்படியே சரிகின்றது... மூச்சு நின்று விட்டது....
அடச்சீ, என்ன மாதிரி கற்பனை? அவசரமாக ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தான். இடையில் நரேனும் சேர்ந்து கொண்டான். நரேன் வந்தவுடன் கொஞ்சம் தைரியம்....
சுதர்சனா பூஜையறையில் விழுந்து கிடந்தாள். எதையோ கவனித்து விட்ட நரேன் அப்படியே நின்று விட, ஓடிப் போய் சுதர்சனாவை மடியில் போட்டுக் கொண்ட அந்தரீஸ் அவள் தலையைத் தடவி கன்னங்களைத் தட்டினான்!
நரேன் சுட்டிக் காட்டியதும் அசடு வழிந்தான். எமகாதகப் பெண்!
தேவியின் கதாயுதங்கள் இரண்டும் கழற்றப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்தன!
அழாக்குறையாக தன் அழகிய சுருட்டை முடியை நீவி விட்ட அந்தரீஸ், “மொட்டை போட்டுக்கறேன்னு வேண்டித் தொலைச்சுட்டேன் சார்” என்றான். நரேன் சிரித்தான்.
தூங்கிக் கொண்டிருந்த சுதர்சனா அள்ளப்பட்டதும் தள்ளப்பட்டதும் கண் விழித்தாள்! அந்தரீஸையும் நரேனையும் புன்னகையால் வரவேற்றாள். அவள் மொபைல் போன் புதருக்குள் விழுந்து விட்டதாம். தேட வேண்டும் என்றாள். பிறகு அப்பாவியாய்க் கேட்டாள், “ஏன் அந்தரீஸ்? உங்க வீட்டு சாமி மூணு நிமிஷத்துக்கு ஒரு தரம் விலுக் விலுக்குன்னு கையை உதறிகிச்சு?”
அந்தரீஸுக்கு வயிற்றெரிச்சலோடு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது! நரேன் வாய் விட்டு சிரித்தான்!
அந்தரீஸுக்கு சுதர்சனாவை வாரி மடியில் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற அந்தரங்க ஆசை இருப்பது நரேனுக்குத் தெரியும். அதற்கேற்ற சந்தர்ப்பம் வாய்த்தும் அந்தரீஸ் மிகவும் பயந்து போயிருந்ததால் ரொமான்ஸ் பகுதி மிஸ்ஸிங். ஆக நிறைவேறியும் நிறைவேறாத அவன் ரெண்டும் கெட்டான் ஆசை நரேனுக்கு சிரிப்பை வரவழைத்தது. புரிந்து கொண்ட அந்தரீஸ் “சார்.. சார்.. சார்.. ” என்று கெஞ்ச, சொல்ல மாட்டேன் என்பது போல் சைகை செய்தான் நரேன்.
இத்தனை களேபரத்துக்கும் காரணமான சுதர்சனா கவலைப்படாமல் தன் கடமையே கண்ணாக இருந்ததில் வயிறு நோக விழுந்து விழுந்து சிரித்தான். பாவம் நரேன்! அதன் பிறகு சுதர்சனா சொன்ன விஷயம் அவன் சிரிப்பை அப்படியே உறைய வைத்தது!
விக்டர் மார்ஷலின் வீடு
பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு உடனே கிளம்பினான் மார்ஷல். ஜன்னல் பக்கம் நங்கென்ற சத்தம்! தங்கத்தண்டு! யார் விட்டெறிந்தது? எதிரியா? நண்பனா?
சொக்கத்தங்கம்.. மூன்று தலைமுறைகளை வசதியாக வாழ வைக்கும்! அவன் மூதாதையரிடமிருந்து கொள்ளை போன தண்டு! அவனுக்கு உரிமையான தண்டு!
அப்சரஸ் போன்ற அழகான பெண்களின் வெண்ணிற மேனியை விட தங்கத்தண்டின் பொன்னிற மேனி அவனை போதையேற்றியது! உப்புப் பெறாத மரத்தண்டு மதிப்பு மிக்க தண்டாகி இருக்கிறது என்றால் ரசவாதத்தின் அருமையை என்னென்பது? அதைத் தெரிந்து கொள்ளாமல் அவன் போகப் போவதில்லை!
விக்டர் மார்ஷலின் கண்களில் வெறி மின்னியது! !
சட்டமாவது, தூக்கு தண்டணையாவது? போபால் விஷ வாயுக் குற்றவாளிகளை இந்திய அரசால் என்ன செய்ய முடிந்தது?
தங்கத்தண்டை அடி முதல் நுனி வரை முத்தமிட்டான்!
அங்கே இருட்டிலிருந்து வெளிப்பட்ட நல்லமுத்து- லாவண்யாவின் அப்பா, தங்கத்தண்டை சுதர்சனாவிடம் கொடுத்தான். “அம்மாடி, நீங்க சொன்ன மாதிரி ஒரிஜினல் தங்கத்தண்டை அந்த கொலைகாரன் முன்னாடி போட்டேன். நாட்டை விட்டே ஓடற ஐடியாவில் இருந்தவன் மனசை மாத்திகிட்டான். பாக் பண்ணி வச்ச பொருளை எல்லாம் பிரிச்சி போட்டான். அவன் அசந்த நேரம் ஒரிஜினலை எடுத்துட்டு டூப்ளிகேட்டை போட்டுட்டு வந்துட்டேன்.”
சுதர்சனா அந்தரீஸிடம் தங்கத்தண்டைக் கொடுத்தாள். அந்தரீஸிடமும் நரேனிடமும் பக்குவமாக விவரத்தை சொன்னாள். லாவண்யா தன்னை சந்தித்த விபரத்தையும் சுருக்கமாகச் சொன்னாள். நரேன் முகம் அப்படியே உறைந்தது. “எங்களை மாதிரி ஆட்களுக்கு சொந்த வாழ்க்கை இரண்டாம் பட்சம்தானே சுதர்சனா? நீ ஏன் இப்படி சங்கடப்படுறே? ” குரலை சாதாரணமாக வைத்துக் கொள்ள முயன்றான். முடியவில்லை. சின்னப் பெருமூச்சு எழும்ப திடீரென்று மயங்கிச் சரிந்தான். அதே சமயம் ஆம்புலன்ஸ் வருவதற்குச் சரியாக இருந்தது !
அந்தரீஸுக்கு நரேன்- லாவண்யா விவகாரம் தெரியாது! அவன் கவனம் நரேன் மேல் குவிந்த அந்த சில நிமிடங்கள் விக்டர் மார்ஷலுக்கு சாதகமாய் மாறின ! !
மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட நரேன் சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்தான்.
“அந்தரீஸ்” என்றாள் சுதர்சனா. “எலி பொறில மாட்டிடுச்சி. பிடிக்கறதுதான் பாக்கி. பிடிங்க”
இந்தியாவை மட்டுமல்ல, இங்கிலாந்தையும் உலுக்கியது பல்ஸ் பத்திரிக்கை வெளிப்படுத்திய லாவண்யாவின் மரண வாக்குமூலம்!
அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு நிறைய தங்க காணிக்கை கிடைத்திருந்தது. அது ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டது. லாவண்யா குறிப்பிட்ட தங்க வேட்டை அதுவாகத்தான் இருக்கும் என்று நம்பப்பட்டது! உண்மை தெரிந்தவர்கள் மூவர்தான்! நரேன், அந்தரீஸ், சுதர்சனா!
விக்டர் அதற்குள் காணாமல் போயிருந்தான்! விக்டரைப் பற்றி தகவல் சொல்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. விக்டர் மார்ஷலைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!
கலெக்டர் நரேனின் பணியிடை நீக்கம் ரத்தானது. அரசாணையை மாயமாய் மறைய வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் அதே காரணத்துக்காக சிறப்பாக நிர்வகித்து விக்டர் மார்ஷலை முடக்கியவர் என்று புகழப்பட்டு முதலமைச்சர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்! திரும்ப திருவண்ணாமலைக்கே கலெக்டரானார்!
இங்கிலாந்து தூதரக அதிகாரிக்கு பதவி போய் இங்கிலாந்துக்கே திரும்பினார்!
அன்று பௌர்ணமி! சாரி சாரியாய் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். பௌர்ணமி கிரி வலம் திருவண்ணாமலையில் பேர் பெற்றது! உள் நாட்டினர், வெளி மாநிலத்தவர் மட்டுமல்ல, வெளி நாட்டவரும் மந்திர உச்சாடணம் செய்து மலையை வலம் வந்தனர். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்..
இந்தப் பக்கம் கருஞ்சிவப்பு உருவம் காவியணிந்து அன்னதான சோற்றை மாத்திரம் புசித்து சாமியாரோடு சாமியாராக ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி கிரிவலம் வந்தது. அவர் சொற்பொழிவை வேறு சில சாமியார்களும் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக வந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அந்த சாமியாரை சற்று நேரம் பார்த்தனர். பிறகு மிக வேகமாக அருகில் வந்தனர். “ சாமி நமஸ்காரம் ” என்று சொல்லி ஆசி வாங்கினர்!
கிரிவலம் முடித்தபின் சாமியார் தனகிரி நோக்கிப் பயணித்தார்.
விக்டர் மார்ஷல்தான் அது!
சந்நியாசக் கோலம் அவனுக்கு எவ்வளவு பொருத்தமென்றால் அவன் வேடமும், வேத உச்சரிப்பும், நடத்தையும் சிறந்த குருவிடம் தீட்சை வாங்கிய சீடனைப் போல் விளங்க வைத்தன. ஏதோ ஒரு ஈர்ப்பு அவனை எதிலிருந்தோ விலக்கி வைத்தது ! ! ! அந்தக் கோலத்தில் இது வரை அறியாத பரவசத்தை உணர்ந்தான் விக்டர் ! ! ! இடுப்பு வேட்டிக்குள் இருந்த தங்கத்தண்டு என்று அவன் நம்பிய வஸ்து மட்டும் வெறி கொண்ட பழைய விக்டரை தக்க வைத்துக் கொண்டிருந்தது !
அவனது ஆன்ம விகாரத்தை பார்த்து அண்ணாமலை புன்னகைத்ததைப் போல மெல்லிய ஊதக்காற்று வீசியது- தூ......ம்... !
சிரிப்பு வர வரப் பெரிதாகி அசுர சிரிப்பானது!
ஊதக்காற்று வர வரத் தீவிரமாகி சூறைக் காற்றாய் புழுதியில் சுழன்றடித்து மரக்கிளைகளை வளைத்தது!
தூ ...ம்! து..தூம்..! து தும் ததூம்! துதும்த தம்த தூம்! து தும்த தம்த தும்த .....தூ ...ம் .....ம்....ம் ! !
தொடரும்