வினை சுடும்
"ஏய் உன்ன நான் விட மாட்டேண்டி.."
"டேய் போடா.."
"ஏ ஏ ஏய் ... என்னை நம்ப வெச்சுக் கழுத்தை அறுத்துட்டே இல்ல..உன் சாவு என் கையாலதாண்டி.."
"இன்ஸ்பெக்டர் சார் என்ன பாத்துட்டு இருக்கீங்க..? அவனை இழுத்துட்டுப் போங்க.."
"எஸ் மேடம்.."
"சார்,ஒரு ரிக்வெஸ்ட்..இதுல என் பேர் வெளிய வராம பாத்துக்குங்க.."
"ஷ்யூர் மேடம் ...இன்னிக்கு நைட்டுக்கு மட்டும் உங்க பாதுகாப்புக்கு ரெண்டு கான்ஸ்டபில்ஸ் இங்க இருக்கட்டும்.."
"இல்ல தேவை இல்லை சார்..அதான் இவனை அர்ரெஸ்ட் பண்ணியாச்சே.."
"ஓகே மேடம்..இப்போ நாங்க இவனைக் கூட்டிட்டுப் போறோம்..மத்த ப்ரொசீஜர்ஸ் எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்.."
போலீஸ் ராஜேஷை இழுத்துக் கொண்டு போக , செக்யூரிட்டியிடம் கேட்டைப் பூட்டச் சொல்லி விட்டு , பங்களாவிற்குள் வந்து கதவைப் பூட்டிக் கொண்டாள் ரம்யா..இவ்வளவு நேரம் இருந்த தைரியம் லேசாக மங்கத் தொடங்கியது..
'எவ்வளவு பெரிய காரியம் செய்து விட்டோம்.இதனால் என் வாழ்க்கை பாதித்து விடுமா.?இந்த விஷயம் மட்டும் மோகனுக்குத் தெரிந்து விட்டால் என்னவாகும்.?'
'ம்ம்ம் அதெப்படித் தெரிய வரும்....லண்டனில் இருப்பவருக்கு இங்கே என்ன நடக்கிறது என்பது எல்லாம் எப்படித் தெரிய வரும்.?..நானாகச் சொன்னாத்தான் உண்டு.'
ஹா...நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டு விட்டு , ப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டே போய்த் தன் அறை மெத்தையில் சரிந்தாள்..மனம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனது.
5 ஆண்டுகளுக்கு முன்பு...
ராஜேஷ்..
அந்தப் பொறியியல் கல்லூரியின் கனவு நாயகன்...
பல பெண்கள் அவன் பின்னால் சுற்ற , அவன் மனதை மயக்கிய ஒரே பெண் ரம்யா...
பல பெண்களின் கனவுக் கண்ணன் தன் பின்னால் சுற்றுவதைப் பெருமையாக நினைத்த ரம்யா , சிறிது காலம் தன் பின்னால் ராஜேஷை சுற்ற விட்டுப் பின் ராஜேஷின் காதலை ஏற்றுக் கொண்டாள்..
வகுப்பறையில் பாடம் வளர்ந்ததை விட , கேண்டீன் , மரத்தடி , ப்ளே க்ரவுண்ட் என்று இவர்களின் காதல் நன்றாகவே வளர்ந்தது...கல்லூரிக்கேத் தெரிந்த காதல் ஜோடியாய் வலம் வந்தார்கள்...
சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து , இனிமையாய் மட்டுமே போய்க்கொண்டு இருந்தது காதல்...'உனக்கு நான்தான் எனக்கு நீதான்' என்று வருங்காலத்தைப் பற்றிய கனவுகளில் மிதந்தார்கள்.
கல்லூரியின் இறுதி நாள் வந்தது...பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் வந்தது...
இருவருக்கும் வேறு வேறு ஊர்களில் வேலை கிடைத்தது.
அந்தத் தற்காலிகப் பிரிவு ரம்யாவைத் தன்னிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிக்கப் போகிறது என்று ரம்யாவை உண்மையாய்க் காதலித்த ராஜேஷ் அப்போது அறிந்து இருக்கவில்லை...
நகர் முழுதும் வலம் வந்த காதல் , தற்போது அலைபேசியில் மட்டுமே தொடர்ந்தது...
நேரில் சந்திக்கும் நாளுக்காக , இருவரும் காத்திருந்தார்கள்.
ஆனால் , இதற்கிடையில் யாருமே எதிர்பார்த்து இருக்காத வகையில் , ரம்யா வேலை செய்த கம்பெனியின் முதலாளி சதாசிவத்துக்கு ரம்யாவின் திறமைகளும் குணமும் மிகப் பிடித்துப் போக , தன் மகன் மோகனுக்கு ரம்யாவைத் திருமணம் செய்து வைத்துத் தன் மருமகளாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்...
ரம்யாவைப் போல் ஒரு திறமையான பெண் தனக்கு மருமகளாய் வந்தால் , தாயில்லாமல் தன்போக்கில் வளர்ந்த தன் பிள்ளை பொறுப்பானவனாய் மாறிவிடுவான் என்று அவர் நினைத்தார்.
ரம்யாவின் பெற்றோரிடம் ரம்யாவைப் பெண் கேட்டார்...இவ்வளவு பெரிய மனிதர் தன் மகளை மருமகளாக்கிக் கொள்ள நினைப்பது தங்களது பாக்கியம் என்று நினைத்த அவர்கள் உடனே சம்மதம் தெரிவித்தார்கள்..
ஒரு நல்ல நாளில் முறைப்படி பெண் பார்க்க மோகனையும் கூட்டிக் கொண்டு வருமாறு சொன்னார்கள்....மோகன் லண்டனில் வேலையில் இருப்பதால் திருமணத்திற்கு அவனை வரவழைத்துக் கொள்ளலாம் என்றும் , தன் வார்த்தைகளை மோகன் தட்ட மாட்டான் என்றும் சதாசிவம் சொல்ல , திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
இத்தனை ஏற்பாடுகளையும் கண்டு செய்வதறியாது திகைத்துப் போயிருந்தாள் ரம்யா..
'என்ன செய்வது..எப்படிச் சொல்வது..
ராஜேசுக்கும் தனக்கும் உள்ள காதலை..
யார் காதில் வாங்கப்போகிறார்கள்...
காதில் வாங்கினாலும் யார் ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள்...'
'என்ன செய்வது..'
பலவாறாக யோசனை சென்றது....நாட்களும் வேகமாகக் கடந்து கொண்டே இருந்தது...திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது...
செய்வதறியாது திகைத்துப் போயிருந்த நிலையில் , ரம்யாவின் மனது , சதாசிவம் குடும்பத்தின் வசதிகளைப் பார்த்து சற்றே தடுமாறத் தொடங்கி இருந்தது...
அவர்களது ஆடம்பரங்களைப் பார்த்து வாயடைத்துப் போனாள்...
ஒரு கட்டத்தில் மிடில் க்ளாஸ் ராஜேஷா இல்லைக் கோடீஸ்வரன் மோகனா என்று யோசிக்கத் தொடங்கினாள்...
திருமணத்தன்று தான் உடுத்திக் கொள்ள வேண்டிய உடைகளாய் சதாசிவத்தின் வீட்டில் இருந்து வந்து இறங்கிய உயர் ரக பட்டுப் புடவைகளையும் பரம்பரை நகைகளையும் பார்த்து மிரண்டே போனாள்...
இத்தனைக்குப் பிறகு , ராஜேஷை மறப்பதில் அவளுக்கொன்றும் மிகுந்த சிரமம் ஏற்படவில்லை..
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு லண்டனில் இருந்து மோகன் வந்திறங்கினான்...
புகைப்படத்தில் பார்த்ததை விடவும் மிக அழகாக இருந்தான் மோகன்...மோகனை நேரில் பார்த்த மாத்திரத்தில் , ராஜேஷின் நினைவுகள் சுத்தமாக அழிந்து போயிருந்தது ரம்யாவின் மனதில்...
மிகத் தடபுடலாய்ப் பல பெரும்புள்ளிகளின் முன்னிலையில் விமரிசையாக நடந்தேறியது திருமணம்...திருமணமான இரண்டே மாதத்தில் ரம்யாவும் மோகனும் லண்டன் சென்றனர்...
வசதியாய் வளர்ந்த மோகன் எப்படிப் பட்டவனாய் இருப்பானோ என்று பயந்த ரம்யாவிற்கு , மோகன் ஒரு ஆச்சரியமாய்த் தெரிந்தான்...ரம்யாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் மோகன்.
ராஜெஷைத் திருமணம் செய்து இருந்தால் நிச்சயமாய் வாழ்க்கை இவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்து இருக்காது என்று உணரத் தொடங்கினாள் ரம்யா.இனிமையாக மட்டுமே சென்று கொண்டு இருந்தது வாழ்க்கை..
இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் மோகனின் தந்தை சதாசிவம் மாரடைப்பால் இறந்து போக , மோகனால் லண்டன் வேலையை உடனே விட்டு விட்டு வர முடியாத சூழலில் , ரம்யா கம்பெனிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிட்டது.
முதல் நாள் அலுவலகம்...
ரம்யாவின் அசிஸ்டன்ட் ஜானவி கம்பெனி ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தாள்...சீஃப் என்ஜினியராக ஜானவி அறிமுகம் செய்து வைத்தவனைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து போனாள் ரம்யா.
'அது ... அது ...ராஜேஷா ...
ஆமாம் ராஜேஷ்தான்..
ராஜேஷ்தான்..
இது என்ன புதுக் குழப்பம்..
இவன் எப்படி இங்க வந்தான்..
ஒரு வேளை என்னைத் தேடிக் கண்டுபுடிச்சுத்தான் வந்து இருப்பானோ...
இவன் ஏதாவது பிரச்சனை கொடுத்தால் எப்படி இவனைச் சரி கட்டுவது..
இப்போ என்ன செய்வது..
என்ன செய்வது...'
யோசித்துக் கொண்டே அந்த நாள் சென்றது.
ஆனால் ராஜேஷ் ரம்யாவைத் தெரியாதது போலவே நடந்து கொண்டான்.
'நிஜமாகவே அது ராஜேஷ்தானா...?'
குழப்பத்திலேயே ஒரு வாரம் போனது...
அன்று காலை , ராஜேஷைத் தன் அறைக்கு வரவழைத்தாள் ரம்யா.
"என்ன ராஜேஷ்...எப்படி இருக்கீங்க...?"
"நல்லா இருக்கேன் மேடம்..."
"மேடமா..!!..."
"................."
"என்னைத் தேடித் தான் வந்தீங்களா ராஜேஷ்..?"
"உங்களை எதுக்கு மேடம் நான் தேடணும்...?"
"குழப்பமா இருக்கு ராஜேஷ்...என்னை யாருன்னே தெரியாத மாதிரி நடந்துக்கறீங்க..?அதுக்கு என்ன அர்த்தம்..?"
"எந்த அர்த்தமும் இல்ல மேடம்..."
"அய்யோ ராஜேஷ்...ரம்யான்னே கூப்பிடுங்க..."
"பரவாயில்ல..மேடம்னே கூப்பிடுறேன்..."
"எப்படி இருக்காங்க உங்க மனைவி..?"
"நான் கல்யாணம் பண்ணிக்கலை..."
"ஏன்..!!"
"உங்களை நினைச்ச மனசால வேற ஒரு பொண்ணை நினைச்சுக் கூடப் பாக்க முடியாது என்னால்.."
"முட்டாள்தனமா இருக்கு ராஜேஷ்..."
"உங்களுக்கு வேணும்னா என் காதல் முட்டாள்தனமாத் தெரியலாம்...ஆனா எனக்கு .."
"ராஜேஷ்..அழறீங்களா..?கண்ட்ரோல் யுவர்செல்ஃப் ராஜேஷ்.."
"எப்படி முடிஞ்சுது உங்களால என்னை விட்டுட்டுப் போறதுக்கு...நம்ம காதலை மறந்துட்டுப் போறதுக்கு..."
"நிலைமை என் கையை மீறிப் போய்டுச்சு ராஜேஷ்...அந்தச் சூழ்நிலையில எந்த ஒரு முடிவும் எடுக்குற துணிச்சல் இல்லாமப் போய்டுச்சு எனக்கு..."
".........."
"என்னை மன்னிச்சுடுங்க ராஜேஷ்..தயவு செஞ்சு என்னை மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கையை அமைசுக்குங்க.."
"ஹும் ...இதுக்கு மேல எனக்கு...இன்னொரு வாழ்க்கையா..உங்களை என் வாழ்க்கையில திரும்பவும் ஒரே ஒரு முறையாவது சந்திப்பேனான்னு ஏங்கிட்டு இருந்தேன்...இப்போப் பாத்துட்டேன்..இது போதும் மேடம்..இந்த ஒரு ஜென்மத்துக்கு இது போதும்..."
ராஜேஷ் அங்கிருந்து நகர , ரம்யா அவனை அழைத்தாள்..
"ராஜேஷ்...!!"
"ரம்யா..!!"
அந்தக் குரலில் ஒரு நொடி உருகித்தான் போனாள் ரம்யா...
"ராஜேஷ் போயிருங்க ராஜேஷ்,தயவு செஞ்சு என் வாழ்க்கையை விட்டுப் போயிருங்க.."
தலையில் கை வைத்தபடி நாற்காலியில் சரிந்தாள் ரம்யா...
ராஜேஷ் வெளியேறினான்...
'ராஜேஷ்...ராஜேஷ்...!!'
அந்தப் பெயரைத் தவிர வேறு எதுவும் மனதிற்குள் செல்லவில்லை ரம்யாவுக்கு...
ஒரு மணி நேரம் சென்று இருக்கும்...
"மேடம்.."
அசிஸ்டன்ட் ஜானவியின் குரல் கவனத்தைக் கலைத்தது...
"ராஜேஷ் சார் இதை உங்கிட்டக் கொடுக்கச் சொன்னார்...."
ஜானவி அங்கிருந்து நகர்ந்ததும் , அந்தக் கவரைப் பிரித்தாள்..
உள்ளே இருந்தது ஒரு கடிதம்...ராஜேஷ் தன் கையால் எழுதியது...
"டியர் ரம்யா..
உன்னை மறந்து விட்டு எனக்கு வேறு வாழ்க்கை இல்லை..
நேற்று வரை கண்களை மூடி உன் நினைவுகளோடு வாழ்ந்து வந்தேன்...
இன்று என் கண் முன்னால் நீ..என் ரம்யா..என்னுடைய ரம்யா..
இன்னொரு முறை உன்னைத் தொலைக்க நான் விரும்பவில்லை..
நிகழ்காலத்தை இழந்து விட்டேன் என்று நினைத்து இருந்த எனக்கு,என் எதிர்காலமாய் நீ வேண்டும் ரம்யா..
நம் காதலை முழுமை அடையச் செய்வோம் ரம்யா..
என்னவளாய் வா ரம்யா..புது வாழ்வு தொடங்குவோம்...
இனி முடிவும் நம் எதிர்காலமும் உன் கையில்...
உனக்காக மட்டும் உயிர்வாழும்
உன்
ராஜேஷ்..."
அதிர்ந்து போனாள் ரம்யா..
'எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன் ராஜேஷ்..
சரியோ தவறோ இப்போ நான் வேறு ஒருவனுடைய மனைவி..
உன்னால என் வாழ்க்கைப் பறி போய்டுமோன்னு பயமா இருக்கு ராஜேஷ்..
ஏன் இவ்வளவு குழந்தைத் தனமா இருக்கிறாய் ராஜேஷ்..
என் மேல ஏன் இவ்வளவு பாசம் வெச்ச ராஜேஷ்..
அது என்னோட தப்பு இல்ல..உன்னோடது..
உன்னால் என் வாழ்க்கைப் பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்..
என்ன செய்யலாம்...என்ன செய்யலாம்...'
ஒரு முடிவுக்கு வந்தவளாய் , ராஜேஷுக்கு ஒரு பதில் கடிதம் எழுதினாள்...
ராஜேஷின் அறை...
தன் இருக்கையில் அமர்ந்து இருந்த ராஜேஷ் , கிட்டத்தட்ட நெருப்பின் மீது உட்கார்ந்து இருந்தான்..
'ஏண்டி , உன்னைச் சும்மா விடுறதுக்கா , ரெண்டு வருஷம் நாயா அலைஞ்சு உன்னைத் தேடிக் கண்டுபுடிச்சேன்..'
'அது எப்படிடி இவ்வளவு சர்வ ஜாக்கிரதையா வேலை பாத்து இருக்கே நீ..'
'உன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி கூட என்கூட ஃபோன்ல இளிச்சியேடி.'
'எதுக்குடி..'
'எதுக்குடி என்னை நம்ப வெச்சு ஏமாத்தினே..'
'உன்னோட எல்லாம் ஒருத்தன் ரெண்டு வருஷம் குடும்பம் நடத்துறான்னா , அவன் எப்பேர்ப்பட்டவனா இருப்பான்...'
'உன்னை ஒழிச்சுக் கட்டத்தாண்டி ரெண்டு வருஷமா காத்துட்டு இருக்கேன்..'
'நாயா அலைய வெச்சியேடி உன் பின்னால..அந்த நாய் கடிச்சுக் குதறப் போகுதுடி உன்னை..'
'நீ செத்தடி...நீ செத்த...'
ஜானவி கொண்டு வந்து கொடுத்த ரம்யாவின் கடிதத்தை அலட்சியமாக வாங்கி மேசையில் வீசிவிட்டு அவளை வெளியே போகுமாறு ஜாடை காட்டினான்..
லெட்டர் எழுதுரியாடி நீ எனக்கு லெட்டர்.
கடிதத்தைப் பிரித்துப் படித்தான்..
"டியர் ராஜேஷ்,
உங்களிடம் நிறைய பேச வேண்டும்..
இன்று இரவு என் வீட்டிற்கு வரவும்..
ரம்யா.."
அந்தக் கடிதத்தைக் குரூரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜேஷ்...
'சாவை லெட்டர் எழுதிக் கூப்பிடுறா பார் இவ.
வர்றேண்டி வர்றேன்...'
அன்று இரவு மணி 10..
ரம்யாவின் பங்களா..
ராஜேஷின் வருகைக்காய் காத்திருந்தாள் ரம்யா..
தன் அறையில் அவள் தனித்து இருக்க , ராஜேஷ் பங்களாவிற்குள் வந்தான்...
".............. என்ன வாழ்க்கை வாழுறா பார்ரா..." , பங்களாவை சுற்றி முற்றிப் பார்த்தவன் , மெல்ல மாடிப் படிகளில் ஏறி ரம்யாவின் அறைக்கு வந்தான்..
அறைக்குள் நுழைந்தான் ராஜேஷ்.
"எதுக்கு ரம்யா என்னை வரச் சொன்னாய்..?"
"அதான் சொன்னேனே ராஜேஷ்..உங்ககூட கொஞ்சம் பேசணும்னு.."
"சரி என்ன பேசணுமோ சீக்கிரமாப் பேசு..நான் கிளம்பணும்..."
"என்ன ராஜேஷ் , என்னை உங்களால மறக்கவே முடியலை , நான் இல்லாம உங்களுக்கு வாழ்க்கையே இல்லைன்னு எல்லாம் சொன்னீங்களே...இப்போ இப்படி வெறுப்பாப் பேசுறீங்க "
"ஏய் ஏய் ... நீயெல்லாம் ஒரு பொம்பளைன்னு உன்னை நான் இன்னும் மறக்காம இருப்பேன்னு வேற எதிர்பாக்கறியா.."
"வேற எதுக்கு ராஜேஷ் அப்படி உருகி உருகி ஒரு லெட்டர் எழுதினே..."
"ஆமாண்டி எழுதுனேன்.."
"அட எழுதினே ரைட்டு ,,எதுக்கு எழுதினே அதைச் சொல்லு..."
"எனக்கு உன்கிட்ட வேண்டியது உன்கூட சேர்ந்து வாழுற வாழ்க்கை இல்லை.."
"ம்ம்ம் வா வா வா ..இப்போத்தான் நீ விஷயத்துக்கே வர்றே.."
"எனக்குத் தேவை ..."
"ஒரு கோடி..?"
"ஹா அவ்ளோதானா?"
"ரெண்டு கோடி போதுமா.."
"பத்தாது.."
"3 கோடி.."
"இன்னும் கொஞ்சம்.."
"இது கொஞ்சம் ஓவர் ராஜேஷ்..."
"ஆமாண்டி..இன்னையோட நீ ஓவர் தான்..எனக்குத் தேவை உன்னோட உயிருடி.."
அசுர வேகத்தில் ரம்யாவின் மேல் பாய்ந்து , அவள் கழுத்தில் கத்தியைச் செருகப் போன அந்த நொடியில் ,
"ஹாண்ட்ஸ் அப்.."
கதிகலங்கிப் போனது ராஜேஷுக்கு..
அவனைச் சுற்றி வளைத்தபடி போலீசார் நின்றிருந்தனர்...
"இந்த ட்விஸ்டை நீ எதிர்பார்க்கல இல்ல...என்னை இந்த அளவுக்கு முட்டாளுன்னு நினைச்சுட்டியே ராஜேஷ்.."
"ஏய் உன்ன நான் விட மாட்டேண்டி..."
"டேய் போடா..."
"ஏ ஏ ஏய் ... என்னை நம்ப வெச்சுக் கழுத்தை அறுத்துட்டே இல்ல..உன் சாவு என் கையாலதாண்டி.."
"இன்ஸ்பெக்டர் சார் என்ன பாத்துட்டு இருக்கீங்க..? அவனை இழுத்துட்டுப் போங்க.."
"எஸ் மேடம்.."
"சார்,ஒரு ரிக்வெஸ்ட்..இதுல என் பேர் வெளிய வராம பாத்துக்குங்க.."
எல்லாம் முடிந்ததாய் நினைத்து நிம்மதியாய்த் தூங்கிப் போனாள் ரம்யா..
சற்று நேரம் கடந்திருக்கும்...
ட்ரிங் ட்ரிங்..
சடாரென்று விழித்த ரம்யா திகைத்துப் போனாள்..அவளது ஃபோன் ஒலித்தது..
எதிரில் பேசியது மோகன்..
ஒரு கணம் கண்கள் இருட்டியது ரம்யாவிற்கு...
விஷயம் கீது தெரிந்து இருக்குமோ...
பேசுவதா , வேண்டாமா ...ஃபோனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்..
முழுதாய் அடித்து ஓய்ந்து மறுபடியும் அடித்தது...
இருதயத் துடிப்பு எகிற , போனை அட்டெண்ட் பண்ணினாள் ,"ஹாய் மோகன்.." , குரல் காற்றாய் வெளி வந்தது..
"ஹாய் ரம்மி..ஹவ் ஆர் யூ ..ஐ மிஸ் யூ சோ மச் டியர்.." , மோகன்..
ஹ .. போன உயிர் திரும்பி வந்தவளாய் ,"நான் நல்லா இருக்கேன்..நீங்க சீக்கிரமா இந்தியா வந்துருங்க மோகன்"
"சீக்கிரமா வந்துடுறேன் செல்லம்.."
பேசிக் கொண்டு இருக்கும்போதே வீட்டின் தொலைபேசி அடித்தது..
மோகனிடம் பேசிக் கொண்டே தொலைபேசியை எடுத்துப் பேசினாள் , எதிரில் பேசியது இன்ஸ்பெக்டர்..
"மேடம்,ராஜேஷ் எங்க கஸ்டடியில இருந்து எஸ்கேப் ஆய்ட்டான்...நாங்க அவனைத் தான் சர்ச் பண்ணிட்டு இருக்கோம்..நீங்க ஜாக்கிரதையா இருங்க மேடம்..."
தொண்டை அடைத்து விட்டது ரம்யாவுக்கு..அலைபேசியில் மோகன்.
என்ன செய்வது..ராஜேஷிடம் இருந்து எப்படித் தப்பிப்பது..
"ஹலோ ஹலோ ..ரம்மி...ரம்மி..லைன்ல இருக்கியா..என்ன ஆச்சு ..இஸ் எவரிதிங் ஆல்ரைட்?"
"எஸ் மோகன் ஐயாம் ஆஆஆஆ......"
எதிர்பார்க்காத நொடி நேரத்தில் கதவை உடைத்துக்கொண்டு பாய்ந்து வந்து நின்றான் அவன்....
"ஏய் ஏய் நீ ..."
அவள் உணர்ந்து கொள்ளும் நொடிக்கு முன் நொடியே , அவனுடைய கத்தி அவளது கழுத்தைக் கிழித்து குரல்வளையை அறுத்து இருந்தது...
மோகன் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டான்...எல்லாம் முடிந்து இருந்தது...
ரம்யாவின் சாம்பல் மட்டுமே அவனிடம் காட்டப்பட்டது...நடைப்பிணமாய் இருந்தான் மோகன்...
"அந்த ராஜேஷை எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க இன்ஸ்பெக்டர்..அவனை என் கையாலேயே கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்.."
"உணர்ச்சிவசப் படாதீங்க மிஸ்டர்.மோகன்.."
"எப்படி சார்..எப்படி..எனக்கு எல்லாமா இருந்த ரம்யா இப்போ இல்ல..இல்லவே இல்ல."
"அவனால எங்ககிட்ட இருந்து தப்ப முடியாது..கூடிய விரைவில் மாட்டுவான்.."
"ரொம்ப நன்றி சார்.."
எல்லாரும் கிளம்பிய பிறகு தனிமையில் இருந்தான் மோகன்...
நீண்ட யோசனையில் மூழ்கிப் போயிருந்தான்...
அவன் அலைபேசி ஒலித்தது..திடுக்கிட்டு விழித்தான்.
டிஸ்ப்ளேயைப் பார்த்து விட்டு சுற்றிலும் ஒரு பார்வையை வீசிவிட்டுப் பேசினான்.
"ஹலோ.."
"ஹாய் மோகன்.."
"ஹலோ நிஷா டார்லிங்..ஐ மிஸ் யூ பேபி..."
"அங்க இப்போ சிச்சுவேஷன் என்ன.."
"நம்ம திட்டப்படி எல்லாமே நல்லபடியா முடிஞ்சுது...எங்கப்பன் சாகும்போது கூட எனக்குக் கெடுதல் பண்ணிட்டுத்தான் செத்துப் போனான்...எல்லா சொத்தையும் என் அருமைப் பொண்டாட்டி பேர்ல எழுதி வெச்சுட்டான்...அதுனால தான் இப்போ அனாவசியமா அவளைப் போட வேண்டியதாப் போச்சு.."
"உங்க மேல யாருக்கும் டவுட் வரலியே.."
"அதுக்கு வாய்ப்பே இல்ல...இங்க எவனோ ஒருத்தன் ராஜேஷுன்னு , என் பொண்டாட்டியோட பழைய காதலனாமா..அவனாவே வந்து பழியை ஏத்துக்கிட்டான்..என் வேலை ஈசியா முடிஞ்சு போச்சு.."
"ம்ம் குட்.."
"இங்க எல்லாம் கிளியர் ஆன உடனே சொல்றேன்..நீ கிளம்பி வந்துடு டார்லிங்.."
படார்..படார்..
பேசிக் கொண்டு இருக்கும்போதே கதவை உடைத்துக் கொண்டு பாய்ந்து வந்து நின்றான் அவன்..
திகைத்துப் போன மோகன்
"ஏய் ஏய் நீ...."
.....வினை சுடும்.....
- கிருத்திகா தாஸ் ...