நடை பாதை அவலங்கள்

நடைபாதை அவலங்கள்
``````````````````````````````
ஆயிரத்துக்கு ரூபாய்நூறு என
ஆறாயிரம் வட்டிக்கு வாங்கி
உடல் வலிக்க கால்கள் கடுக்க
பலதெருக்கள் அலைந்து திரிந்து
பலகடைகள் ஏறி இறங்கி
பலசாமான்கள் அதில் வாங்கி
நடக்க நல்லா பாதையவிட்டு
நடை பாதை ஓரத்தில்தான்
விரித்தேன் என் கடையை நானும்

அடுக்கு மாடி கட்டிடத்தில்
அடுக்கடுக்கா கடைகள் கட்டி
அலுங்காம குலுங்காம
அசல் மேல அசல் வச்சும்
அவன் அச்சிட்ட விலைக்கே
அள்ளிவரும் ஆட்களை பாரு
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு
ஓராயிரம் முறை பேரம் பேசும்
ஒருத்தனையும் இங்குபாரு

நாலு காசு சேரும் முன்னே
நாளும் பொழுதும் கழியும் முன்னே
மூக்கு வேர்த்து வந்திடுவான்
காக்கி சட்டை காவல்காரன்
கேட்ட பணம் கொடுக்கலைனா
அள்ளி தூக்கி எறிந்தாலும்
கேட்க இங்கு நாதி இல்லை
கேட்ட பணம் கொடுத்த பின்பு

பெருமூச்சு விடும் முன்பு
பெரும் படையாய் வந்திடுவான்
மாநகராட்சி வண்டிக்காரன்
குப்பை சேர்ந்து ஊர் முழுக்க
நாற்றம் அது கண்டு கிடக்க
அள்ள ஒன்றும் இல்லைன்னு
அள்ள வந்தான் பொருளை இங்க
அய்யா அம்மான்னு கதறினாலும்
அசராம அள்ளுறான்
மனசாட்சியை விற்றுவிட்டு

முத்தம் கொடுக்க போராடினால்
மொத்த ஊரும் கூடும் பாரு
வயிற்று பிழைப்புக்காக போராடினால்
திரும்பி பார்க்க இங்க யாரு
நித்தம் இப்படி செத்து பிழைத்தும்
நிறையாத என் வயிற்றைப் பாரு

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (24-Jan-15, 2:03 pm)
பார்வை : 197

மேலே