உவமை

"நான் வெறும் கம்ப்யூட்டர்! நீதான் வின்டோஸ்"
என்றால் சிணுங்குகிறாள்,
"யார் லினக்சு?!" என்று.
"நான் வெறும் கார்! நீதான் பெட்ரோல்! "
என்றால் கோபிக்கிறாள்,
"யார் எல் பி ஜி?" என்று.
"நான் வெறும் கடிகாரம், நீதான் கை! "
என்றால் வருந்துகின்றாள்,
"எவ்வளவு கைகள்? " என்று.
"நான் வல்லினம், நீ மெல்லினம்"என்றால்
சீறுகின்றாள் " யார் இடையினம் " என்று.
"நான் சிவம்! நீதான் சக்தி" என்றாலோ
கலங்குகிறாள் " கங்கை ?!" என்று.
இப்படி எந்த உவமை சொன்னாலும்
வெதும்புகிறாள்.
சொல்லாமல் இருந்தாலோ
முணுமுணுக்கிறாள்,
"அன்பே இல்லை" என்று.
மெல்லத் தடவினேன் எங்கள் வாரிசு
வளரும் அவள் வயிற்றை -
"மூன்றாவதாக நம்முடன் இருப்பதெல்லாம்
இந்த மைனர்தான்" என்றேன்.
அவள் புன்னகைக்க,
அவன் உள்ளிருந்து உதைக்க,
நான் அழுதேன், ஆனந்தத்தில்.

எழுதியவர் : tssomaஎனும் சோமா (24-Jan-15, 7:53 pm)
சேர்த்தது : சோமா
Tanglish : uvamai
பார்வை : 83

மேலே