மூங்கில் யாத்திரை… -Mano Red

முச்சந்தியில்
ஒப்பாரியுடன் தொடங்கியது
மூங்கில் யாத்திரை,
சுற்றிலும் தலை கவிழ்ந்தே
சுற்றங்கள் வந்தாலும்
வானம் பார்த்தே அது சென்றது…!!

அழுகைகளும்,
அலறல் கதறல்களும்
அதிகமாய் இருந்தாலும்,
அவர் காடு சென்றதும்
அவ்வீடு கழுவப்பட்டதில்
அவர் ஆனார் அதுவாக…!!!

அதுவான அவர்
தெரு கடக்கையில்
நடைபாதை தடமெல்லாம்
பிரதியெடுத்தன
அவரின் வாழ்நாட்களை…!!
சிதறி ஓடியது அவரின்
புறம் மட்டுமல்ல அகமும் தான்…!!!

நான்கு பேர் அல்ல,
நாற்பது பேர் வந்தாலும்
சுமக்கப் போவது
வெற்றுடலை மட்டுமே..!!
ஆனால் அவ்வுடல் சுமப்பதோ
பாவ புண்ணியங்களின்
மூட்டை முடிச்சுக்களை…!!

அண்ணாந்து பார்த்தலின்
கடைசி ஆசைப்படி,
பொத்தல் விழுந்த
போர்வைத் துணியுடன்
ஒத்தை உடல்
வித்தை ஏதும் காட்டாமல்
அந்தரம் பார்த்தபடி வருகிறது..!!

உயிருக்கு இல்லாத
மாலை மரியாதைகள்
உடலுக்கு கிடைத்தது..!!
புதிய புகழின் போதை
தலைக்கேறும் முன்பே
உப்பு சப்பில்லா உடல்
உலைக்கு ஏற்றப்பட்டது..!!

உயிர் பிரிந்து
ஊசலாடும் உடல்,
உடன்கட்டை இழந்து
உலகம் துறக்கும் நேரத்தில்
உணர்ந்து கொண்டது,
உலர்ந்து தளர்ந்து போனது
உடல் மட்டுமல்ல…!!

எழுதியவர் : மனோ ரெட் (25-Jan-15, 8:22 am)
பார்வை : 358

மேலே