பொங்கல் கவிதைப் போட்டி - நடுவர் தீர்ப்பு - 08

வணக்கம் தோழர்களே...

பொங்கல் கவிதைப் போட்டியினை நெறியாள்கை செய்த சிறப்பு நடுவர்களின் அனுபவப் பகிர்வுடன் இணைந்துவரும் அறிவுரைகள் உங்களின் கவனத்திற்காக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

அந்தவகையில்... எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சிறப்பு நடுவராக கடமையாற்றிய திருவாளர் ராம் அவர்களின் செய்தி கீழே இணைக்கப் பட்டிருக்கின்றது !


========================================நடுவர் தீர்ப்பு – திரு.ராம் வசந்த்

அன்பு தோழமைகளே

இந்தப் பொங்கல் கவிதை போட்டி தேர்வில் நானும் பங்கு கொண்டேன் .முதலில் வாய்ப்பளித்த நட்புகளுக்கு நன்றி . ஏனெனில் இந்த வாய்ப்பு நிறையக் கவிதைகளைப் படிக்கும் நல்ல பொழுதுகளை அளித்தது .

நான் படைப்புகளை மொத்த தமிழ் சமூதாயத்தின் கவிதை அடையாளங்களாகவே பார்க்கிறேன் . ஏனெனில் அனைத்து வகைக் கவிதைகளும் இருந்தது .

நான் இங்கு படைப்பாளிகளுக்கு , அபிப்ராயங்களை, ஆலோசனைகளை சொல்லும் அளவுக்குக் கவிஞன் அல்ல . அடக்கம் எல்லாம் கிடையாது . உண்மையை சொல்கிறேன்.நான் கவிஞன் இல்லை என்பதற்கு ஒரே ஆதாரம் என் கவிதைகளே .

ஆனால் சில என் எண்ணங்களை மட்டும் பகிர ஆசைப்படுகிறேன் அதுவும் உங்களில் ஒருவனாக மட்டுமே . கவிதை என்பது இயற்றமிழின் ஒரு கலை வடிவம் . கலை என்பது மானுடத்துக்கு உயர்வு அளிக்க வேண்டும் .
அது அழகியலாக இருக்கலாம் . அல்லது பயன்பாடாக இருக்கலாம் .அழகியல் மகிழ்வை கொடுக்கலாம் . பயன்பாடு முன்னேற்றத்தை கொடுக்கலாம்.

இருப்பினும் நான் நினைப்பது இரண்டுமே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதாக இருத்தல் அவசியம். ஒரு வேளை நாளை எழுதும்போது நாளைய காலகட்டத்துக்கு ஏற்றதாக இருத்தல் அவசியம் .
சரி .. எப்படி நாம் கால மாற்றத்தை தெரிந்து கொள்வது ? ஒரே வழிதான் . நிறையப் படிக்க வேண்டும் .நம்மில் எத்தனை பேர் அதை செய்கிறோம் ?

படிக்கவில்லை என்றால் நமக்கு நிச்சயம் நிகழ்வுகள் தெரியாமல் போய்விடும் . மாற்றங்கள் தெரியாமல் போய் விடும் . காலம் தெரியாமல் போய்விடும் கடைசியில் .காலாவதியான ( EXPIRY ) மருந்தாகி விடும் ஆபத்து நேரும் நம் கவிதைகளுக்கு .

அந்தந்த காலகட்டங்களைப் பிரதிபலிக்காத எந்தக் கலையும் , படைப்பும் எப்பேர்பட்ட பின்னணி இருந்தாலும் பிழைப்பது மிகக் கடினம் . உதாரனத்திற்க்கு பரத நாட்டியம் . நாம் இன்னும் கடவுள் தாண்டி வரவே இல்லை அந்த நடனத்தில் .

அதனால் அதன் பயன்பாடு மிகவும் சுருங்கிப் போய் விட்டது . ரஷ்யாவின் பாலே நடனத்தில் , தென் அமெரிக்காவில் சல்சா நடனத்தில் இன்றைய சமூகப் பிரச்சனைகளைக் காட்டுகிறார்கள் . அவை இரண்டுமே நம் பரதம் போன்று மிகப் பழமையானவே .
ஆனால் காலத்தின் தேவைகளை உணர்ந்து கலை மாறுகிறது . வடிவம் அப்படியே இருக்கட்டும் . தவறில்லை . பாடு பொருளை மாற்றுங்கள் . தேடுங்கள் . உருவாக்குங்கள். வார்த்தைகளை இலகுவாக்குங்கள் .ஆங்காங்கே நல்ல வழக்கு நடைகளை முயற்சி செய்யுங்கள் . செய்தால் படைப்புகள் நிச்சயம் நிறைய பேரை சென்றடையும் ..

பாரதி பேசும் நடைமுறை வார்த்தைகளில் கவிதை எழுதினான் . அதுவரை இல்லாத பாடுபொருள்களை பாடினான் .

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?

...................................................................................................
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே...

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே
.............................................................................................

இப்படி இருந்தது அவன் கவிதைகள் .நினைத்துப் பாருங்கள் இவை எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முந்தியவை . . அப்போதைய மற்ற கவிஞர்கள் இப்படியா எழுதினார்கள் . இல்லை . அதனால்தான் பாரதி எல்லோரையும் சென்றடைந்தான் . பண்டிதரும் , பாமரரும் .. இருவரும் படித்தனர் . பயன் பெற்றனர் .மானுடம் உயர்ந்தது .

அடுத்து இந்தப் போட்டி கவிதைகள் குறித்து மட்டும் அல்ல . நமது மொத்த தளத்தின் பெரும்பான்மையினர் தவறி விடுவது ..நானும்தான் .
கவிதைகளை நாம் அளவில் மிகப் பெரியதாகப் படைக்கிறோம் . பெரிய கவிதைகளைப் படிக்கும் அளவுக்குப் பொறுமை , நேரம் நிச்சயம் பலருக்கு இல்லை . அதைவிட முக்கியமானது பெரிய கவிதை வடிவம் வீர்யத்தைக் குறைத்து விடும் .

இன்னொன்று .. ஆறு பத்திகள் பதிக்கிறோம் என்றால் அதை மூன்றாக்க முயற்சி செய்யுங்கள் .மூன்றிலும் மூன்று விடயங்கள் தேவையில்லை . ஒரு செய்தியை, நிகழ்வை தெளிவாக எழுதி விடுங்கள் . அதுதான் நவீன கவிதையின் நிகழ்நிலை .

கற்றது இவ்வளவே .
இனி கற்க வேண்டியது?... உங்களிடமே.

சந்திப்போம் .
நேசங்களுடன்
ராம்வசந்த்

எழுதியவர் : விழாக்குழு (29-Jan-15, 8:56 am)
பார்வை : 453

மேலே