கிழியாத வாழ்க்கை -ரகு
அடுத்தென்ன...
அபிவிருத்தியில்
ஆழ்ந்திருந்தன
பிழைப்புதேடுவோன்
பையில் பாடுகள்
விழி உயர்த்தும்
ஆச்சர்ய பணி
ஆகாசமாயிருந்தது
அவனுக்கு
ஏளனமும்
இகழ்ச்சியும்
பழகியிருந்ததில் சற்றே
புறந்தள்ளியிருந்தான்
பயத்தை
ஏழ்மையின்
இன்னொரு பக்கம்
உணர்த்தியிருந்தது
வாழந்தாகவேண்டியக்
கட்டாயத்தை
தொடர் தோல்விகளும்
இன்னல்களும்
வாழ்க்கையை
இலகுவாக்கியிருப்பதாய்ச்
சொல்லி அவன்
ஆச்சர்யப்படுத்தியகதை
வேறு
ஒழுகும் குடிசையையும்
ஒற்றை இலக்கப்படிப்பையும்
மிச்சப்படுத்திய -தன்
முன்னோர்களைச்
சாடவில்லை அவன்
சாதிக்கும் முனைப்பை
விதைத்துப் போன
சான்றோரென்றான்
அறிந்தவைகள்
அறிவுக்குப் போதுமானவைகள்
வாழ்க்கைக்கல்ல
தூரத்தில்
இருப்பதால்தான்
வானத்தைத் தொடுமறிவு
வந்ததெனும்
தத்துவாதியாய்
இன்னொரு விடியலை
எதிகொள்ளத் துணிந்தான்
கிழிதல் சட்டைகளுடன்
கிழியாத வாழ்க்கையோடு
பயணவழியில்
அவனுக்கான நிழல்
பத்திரப்பட்டிருப்பதாக
கிசுகிசுத்தது நம்பிக்கை
தேடலின் முனைப்பில்
திசைகள் கிழித்தானவன் !