நான் தான் அகிலா அக்கா
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட்டது
குளித்து முடித்து குழந்தை வந்தான்
ஒரே நாளில் போகக்கூடிய நாற்றமல்ல
என்றாலும் "ஜஷ்வந்த்" அழகு அழகு
அத்தனை அழகு.....
எனைமறந்து ரசித்தப்பின்
எல்லாம் கிடைக்குமென்று
விட்டுச் செல்கையில் - சிறு
கைகளால் என் முகத்தை
தடவி தடவி பார்த்தவன்
"அகிலா" அக்கா என்றான்...
நேற்றும் அப்படியே தான்
ஆசையோடு தடவி பார்த்து
"அகிலா" அக்கா என்கிறான்....
அணைத்துக்கொள்கிறான்....
ஓராண்டு ஆகிவிட்டது
இல்லையென்று என் பெயர்சொல்ல
இன்னும் கூட தோன்றவில்லை....
ஏனோ அவன்முன்பு வார்த்தைகள்
ஏதும் வருவதில்லை - அவன் அன்பிற்கு
உரிமையான அந்த "அகிலா அக்கா"
நானாகவே இருந்துவிட்டுப் போகிறேன்....