கனா கண்டேனடி தோழி

கனா கண்டேனடி தோழி

காக்கையும் குருவியும்
முன்போல் பெருகிட
தானிய உணவினை வாரி
நான் இறைத்திட
கனா கண்டேனடி தோழி

காணும் இடமெங்கும்
பசுமைகள் தழைத்திட
பாக்கெட்டில் அடைபடா
பசும்பால் குடித்திட
கனா கண்டேனடி தோழி

தெருவெங்கும் சிறுவர்கள்
திருவிழா போலவே
சடுகுடு பம்பரம்
கோலியோடாடிட

தூலியில் குழைத்தையின்
அழுகுரல் கேட்டிட
ஆரிரோ பாடியே தாயவள்
சேலையை ஆட்டிட
கனா கண்டேனடி தோழி

கதிரவன் வருகையில்
ஆற்றினில் இறங்கிட
தாவணி பெண்களோ
குறும்புடன் நகைத்திட

திருவிழா காலத்தில்
வேட்டிகள் அணிந்திட
மாமன் மகளின் முன்
மீசையை முறுக்கிட
கனா கண்டேனடி தோழி

மலைதனின் உச்சியை
நடந்தே அடைந்திட
மலைவழி அருவியில்
மனம்தனை நனைத்திட

மாங்காய் தோப்பில்
மாம்பழம் திருடிட
வேதியியல் இல்லா
மா அது இனித்திட
கனா கண்டேனடி தோழி

வயல்வெளி நண்டினை
வரப்பினில் பிடித்திட
அது கொண்டு கிடைத்திடும்
ரசத்தினை குடித்திட

நிரம்பிய கிணற்றினில்
தூண்டிலை வீசிட
அகபட்ட மீனை
பாட்டியோ வறுத்திட
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி.........!

எழுதியவர் : கவியரசன் (30-Jan-15, 10:45 pm)
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே