தடுமாறும் வாழ்க்கை - தவிக்கும் மனம்
தவிக்கும் மனம்..! தடுமாறும் வாழ்க்கை...!
தவிக்கும் மனம்...!
தொலைந்தேனோ யில்லை
தொலைக்கபட்டேனோ நான்,
தொற்றுவியாதி போலயென்னை
தொட்டாலே பாவமென
துரத்துகின்ற மானிடமே..!
தவறுயென்ன நான்செய்தேன்
தண்டனைகள் சுமப்பதற்கு
காமனவன் விளையாட்டில்
களவுபோன கல்நெஞ்சால்
தீண்டாமை யாகிவிட்டேன்..!
வாய்மொழியும் வளரவில்லை
வாட்டும்பசி கேட்கவில்லை
அசைவுகளா லுணர்வுகளை
அழுகையிலே சொன்னாலும்
அசிங்கமெனப் பார்க்கின்றார்..!
கருவறையி னிருப்பினிலே
கண்டதொரு இருட்டெல்லாம்
கருணையிலா இவ்வுலகில்
கண்ணீரும் வெந்நீராய்
கணலெனவே கொதிக்குதடி..!
உவர்ப்புயது உலர்ந்துபோகும்
உயிர்மட்டும் மீந்துபோகும்
என்னுடலும் இனிப்பாகும்
எனயேங்கும் ஈயெறும்பும்
என்னிறப்பை யெண்ணுதடி..!
புரிந்துகொள்ளா தொருமிருகம்
பூமியிலே யென்னவென்றால்
மாயையெனு மாசையிலே
மாளிகையில் மதிகெட்டு
மூழ்கிருக்கும் மானிடனமே..!
மறுஜென்மம் யெனயிருந்தால்
மனிதனுயிர் வேண்டாமேன
மண்டியிட்டு நான்கேட்பேன்
மலர்வாழ்க்கை போலன்றே
மடிந்துவிட வரம்கேட்பேன்..!