கல்லறையாகும் கனவுகள் -ரகு
(குறிப்பு :எனது 100-வது கவிதையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் !
கருத்தளித்து வாழ்த்திய அனைத்து தோழர் தோழமைகளுக்கும்
நன்றிகள்பல உரித்தாக்குகிறேன் ! நன்றி ! நன்றி! நன்றி!)
-----------------------------------------------------
அலை(றை)க்கூவலிடுகிறேன்
நான்
நானுமொரு
அலையென்று
சொல்லிக்கொண்டு
மூழ்கும் வித்தை
கற்றுக்கொண்டு
சங்கமித்துக் கொண்டிருக்கும்
என் சந்ததியரின்
முகவரி தேடலானேன்
நம்முள் மூழ்கி
கரைசேராமல்
கல்லறையாகும்
கனவுகளைக் காக்கும்
வல்லமை யாதென்று
வினவும் பொருட்டு
பழுதாகிக் கிடக்கும்
படகுவரை நீள்கிறதென்
கைகள்
பரிதாபத்திற்குரிய
வெருங்கைகளாய்
முன்போகும்போது
கரையையும்
பின் நகரும்போது
கதிரவனையும்
நம்புகிற எனக்காய்
நள்ளிரவு மறந்துக்
கரைகிறது சிலக்
கடற் காகங்கள்
எந்த நம்பிக்கையில்
மிதக்கத் துணிகிறதோ
தமிழ் எழுத்தைத்
தாலாட்டுந்தோணிகள்
மீன்கள்
நிச்சயமென்றே
பரவுகிறது
வலை
மரணம்
நிச்சயமென்று
மீன்கள்
விழுவதில்லை
நான்
நிசப்தித்த
அந்த நள்ளிரவில்
எங்கோ
குண்டுகளின்
சத்தம்
குலைநடுங்கச்
செய்கிறது
சத்தமில்லாமல்
விழுந்திருப்பான்
தமிழினத்தான்
இப்போது நான்
அழுவதென்றால்
பொங்கியெ(அ)ழ வேண்டும்
திராணியற்று
எனக்கு மட்டும்
விடியும்
கிழக்கை வெறிக்கிறேன்
ரத்த வாடையைத்
துப்பிப் போகிறது
காற்று என்மீது